மக்களவை தேர்தல் 2024 முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. அதேபோல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன


நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகிறது.


ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் 33 இடங்களில் 401 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ் ஷர்மிலாவை கட்டப்பா தொகுதியில் காங்கிரஸ் களம் இறக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.


மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் சட்டப்பேரவை தேர்தலில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 118 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் 4வது முறையாக சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆமைக்க தயாராகி வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளார். இதற்கிடையில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா சந்திரபாபு நாயுடுவை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் மோடியும் அமித்ஷாவும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


2019 தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்றத்தில் 151 இடங்களையும்,  மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இம்முறை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கும் எனவும் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.