நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 4 ஆம் தேதி அதாவது இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைசிகட்ட வாக்குப்பதிவுக்கு பின் பல்வேறு நிறுவனங்களால் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 150 முதல் 170 தொகுதிகளில் வெற்றிபெரும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகும் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நிலையில், பாஜக கொண்டாடங்களுக்கு தயாராகி வருகிறது. இதற்கு டெல்லியில் இருக்கும் பாரத் மண்டபம் அல்லது கர்தவ்யா பாதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை கருப்பொருளாகக் கொண்ட இந்த நிகழ்வில், ஒலி-ஒளி நிகழ்ச்சியும் அடங்கும். வெளிநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் உட்பட 8,000 முதல் 10,000 பேர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதை தவிர தேர்தல் முடிவுகளுக்கு பின் பிரதமர் மோடி டெல்லியில் இருக்கும் தனது இல்லத்தில் இருந்து பாஜக அலுவலகம் வரை வெற்றி பேரணி அதாவது தொண்டர்களுடன் இணைந்து ரோட் ஷோ நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பாஜக தலைமை அலுவலகத்தில் தடபுடலான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெற்றியை கொண்டாட பூரி மற்றும் இணிப்பு வகைகள் சமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பாஜக தரப்பில் 201 கிலோ லட்டு மற்றும் இனிப்பு வகைகள் விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மே 28 ஆம் தேதி, ஜனாதிபதி செயலகம் ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழாவிற்காக அலங்கார செடிகளுக்கு 21.97 லட்ச ரூபாய்க்கு டெண்டரை வழங்கியது. இன்று இந்த டெண்டர் திறக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்குள் பூர்த்தியாகும். மேலும், தலைநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பயணம் மற்றும் தங்குவதற்கு வசதியாக மக்களவை செயலகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம்லீலா மைதானம், செங்கோட்டை, பாரத் மண்டபம் மற்றும் யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடங்களுக்காக தேர்தடுக்கப்பட்டது. ஆனால் அதிகப்படியான வெப்பநிலை காரணமாக பாரத் மண்டபம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் விருந்தாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.