ஆந்திர மாநிலத்தில் 45 குரங்குகளை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிலகம் கிராமத்தை ஒட்டி வனப்பகுதி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அங்குள்ள பொதுமக்கள் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது குவியல் குவியலாக குரங்குகள் இறந்து கிடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்ததில் குரங்கு குட்டிகள் உட்பட 45 குரங்குகளை விஷம் வைத்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த குரங்குகள் சிகலம் கிராமப்பகுதியை சேர்ந்த குரங்குகள் இல்லை என்றும் , இது போன்ற சம்பவங்களை நாங்கள் பார்த்ததே கிடையாது என்றும் அந்த பகுதி மக்களும் வனத்துறையினரும் தெரிவிக்கின்றனர். மர்ம நபர்கள் சிலர் குரங்குகளை கொன்றுவிட்டு , டிராக்டர் மூலம் எடுத்து வந்து இங்கு கொட்டி சென்றிருக்கலாம் என அப்பகுதி வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். குரங்குகள் இறந்த இடத்திலேயே வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது. முடிவில் வாழைப்பழத்தில் மர்ம நபர்கள் விஷம் வைத்துக்கொடுத்து குரங்குகளை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து , குற்றவாளிகளை தேடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்கிழமை ) உடற்கூறாய்வு செய்து முடித்த பின்னர் வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் பாதி அழுகிய நிலையில் இருந்த 45 குரங்குகளும் வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.