மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த சமீபத்திய புதிய கோவிட்-19 வைரஸ் குறித்து தனது ஆத்திரத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். “அடேய், இந்த கோவிட் பிரச்னையை போதுமான அளவு அனுபவித்தாயிற்று,” என்று ட்விட்டர் தளத்தில் ஆனந்த் மஹிந்திரா எரிச்சலுடன் கூறியுள்ளார். "கோவிட் ஒரு மனிதனாக இருந்தால், அவனை பாக்சிங் ரிங்கிற்குள் வைத்து, அடித்து விரட்டுவேன்...." என்று அவர் மேலும் ஆத்திரத்தில் எழுதியுள்ளார். இதற்கு மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமன் மிஸ்ரா, "எல்லோரும் தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் விரும்புகிறார், அதன்மூலம் வைரஸ் மேலும் உருமாற்றம் அடையாமல் இருக்கும்" என்று கூறினார். ஆனந்த் மஹிந்திராவைப் பின்தொடரும் ஒருவர் கமென்டில் ஜிஐஎஃப் இல் ஜெர்ரி டாம் குத்தும் கார்ட்டூனுடன் குறியிட்டு, "ஆனந்த் மஹிந்திரா மற்றும் கோவிட்-19 இன் பாக்சிங் நேரடி காட்சிகள்" என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அதற்கு ஆனந்த் மஹிந்திரா “நான் விரும்பும்படியாக...” என்று பதிலளித்தார்.
இந்நிலையில், ஆப்ரிக்கா நாடான போட்ஸ்வானாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. B.1.1529 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரதத்தில் 32 மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். கரோனா வைரசில் இந்தளவுக்கு புரோத ஸ்பைக்கில் மாற்றங்கள் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் இது ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வைரசுக்கு வெளியே இருக்கும் புரோத ஸ்பைக் மூலமே அவை மனித செல்களை பற்றிக்கொள்கிறது. இதில் ஏற்படும் சில மாற்றங்கள் வைரஸ் பரவலை வெகுவாக அதிகரிக்கலாம். கடந்த நவ. 11ஆம் தேதி இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஹாங்காக் நாடுகளுக்கு இந்த உருமாறிய கொரோனா பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் இப்போது சிறிய எண்ணிக்கையில் இந்த புதிய கோவிட் -19 வைரஸைக் கண்டறிந்துள்ளனர். இதன் விளைவாக, புதிய வேரியன்ட்டை பற்றி விவாதிக்க வெள்ளிக்கிழமை வைரஸ் பரிணாமம் குறித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிக்குழுவின் அவசரக் கூட்டத்தை நாடு கோரியது. தென்னாப்பிரிக்க சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வேரியன்ட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை மிக விரைவில் விதிக்கும் என்று கூறினார். கடந்த ஆண்டு பீட்டா மாறுபாட்டைக் கண்டறிந்த முதல் நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. WHO ஆல் "மிகவும் கவலைக்குரியது" என்று பெயரிடப்பட்ட நான்கு வேரியன்ட்டில் பீட்டாவும் ஒன்றாகும், ஏனெனில் இது ஒப்பீட்டளவில் அதிகம் தொற்றக்கூடியது மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகள் அதற்கு எதிராக குறைவாகவே செயல்படுகின்றன.