ஜெய்ப்பூர் ரயிலில் ஆர்பிஎஃப் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ விரரின் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.30 லட்சம் இழப்பீடு:
இதுதொடர்பான அறிவிப்பில், வீரரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.20 ஆயிரம், பொதுக்காப்பீட்டுத் தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரயில்வே சுரக்ஷா கல்யாண் நிதியிலிருந்து ரூ.15 லட்சமும், இறப்பு மற்றும் ஓய்வுக் கருணைத் தொகையாக ரூ.15 லட்சமும் அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஎஃப் வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே வீரர் திகாராம் மீனா மற்றும் 3 பயணிகள் இறந்தனர். ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்பிஎஃப் காவலர் சேத்தன் குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடந்தது என்ன?
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஸ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், அதில் ஒரு ஆர்பிஎஃப் துணை உதவி காவல் ஆய்வாளர் மற்றும் மூன்று பயணிகள் மீது குண்டு நடந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேரை சுட்டுவிட்டு தஹிசார் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்த ஆர்பிஎஃப் காவலர் சேத்தன் குமாரை அங்கிருந்த காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த வீரரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பிடிபட்ட வீரரிடம் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரே ரயில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மும்பை செண்ட்ரல் ரயில் நிலையத்தை எட்டியுள்ளது.
விசாரணையில் தகவல்:
சேத்தன் குமாரிடம் நடத்திய விசாரணயில் ”தன்னுடன் பயணித்த உயர் அதிகாரியை சுட்டுக்கொன்ற பின், பக்கத்து பெட்டிக்கு சென்று அங்கிருந்த பயணிகள் மீது அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடதியதும்” அதில் 3 பேர் உயிரிழந்ததும் அம்பலமாகியுள்ளது. காலை 5 மணியளவில் ரயிலின் B5 கோச்சில் இந்த சம்பவம் நடந்ததும், தாக்குதல் நடத்திய காவலருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.