காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.  கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.


இரு அரசும் விடுத்த கோரிக்கையை விசாரிக்க காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நீரை கூட கர்நாடகா அரசு முழுமையாக திறந்துவிடவில்லை.






இது தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், “கர்நாடக அணைகளில் போதியஅளவுக்கு நீர் இல்லை. இதுவரை இருப்பில் இருந்த நீரைதமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். எஞ்சியுள்ள நீரைக் கொண்டே கர்நாடக‌ விவசாயிகளின் பாசன தேவை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களின் குடிநீர் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  


இதனிடையே காவிரி ஒழுங்காற்று குழுவாது, தமிழ்நாட்டுக்கு மேலும் வினாடிக்கு 5,000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்தது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை அதிகாரி சுப்பிரமணியன் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். 


இது ஒரு புறம் இருக்க காவிரி நதிநீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற பரிந்துரையை கேட்டு கர்நாடகா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை பற்றி பேசுவதற்காக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அவசரமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். காவிரி பிரச்சனைக்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தற்போது இரண்டாவது முறையாக இன்று விதான் சவுதாவில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

I.N.D.I.A Alliance: டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.. எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள் என்ன?