பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அமைச்சரவைக் கூட்டம்:


நாடளுமன்ற  சிறப்புக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியா பெயரை பாரத் என மாற்றுவது, புதிய சட்டங்களை அமல்படுத்துவது, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை குறைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் சமையல் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு, விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டும், மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு நடந்து முடிந்த சில நாட்களிலேயே, இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க: Iphone 15 Series: ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸில் உள்ள புதிய அம்சங்கள் என்ன? டைப் சி-சார்ஜர் உள்ளிட்ட அப்டேட்கள் இதோ..


டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜிஎஸ்ட் வரி:


காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கில், டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பரிந்துரை கடிதத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடன் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க: Apple Watch: ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா 2, சீரிஸ் 9 வாட்ச் அறிமுகம்..புதிய அம்சங்கள், விலை விவரங்கள் உள்ளே


சிறப்புக் கூட்டத்தொடர்:


நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தொடங்க, அடுத்த நான்கு நாட்களும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், கேள்வி நேரம் என்பதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயரை மத்திய அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டில் கூட பாரத் என்ற பெயரை தான் பயன்படுத்தியது.