வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அதேபோல,
பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்:
ஆனால், இவை எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. அதை உறுதி செய்யும் விதமாக செப்டம்பர் 18ஆம் தேதி, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 19ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பு, வரும் 17ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இம்மாதம் 18ஆம் தேதி, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், வரும் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழ் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அந்தந்த தலைவர்களுக்கு அனுப்பப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தில் என்ன நடக்கபோகிறது?
சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாக காந்தி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், "மற்ற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என நம்புகிறேன்.
1) லடாக், அருணாச்சல பிரதேசம் போன்ற இந்திய எல்லை பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது.
2) சாதிவாரி கணக்கெடுப்பின் அவசர தேவை.
3) மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சேதம்.
4) சில மாநிலங்களில் வறட்சி மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டுள்ள தாக்கம்.
இவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் விவாதிக்கப்படும் என நம்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.