சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கை கைது செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள இவர், கடந்த 10 நாள்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்ரித்பால்சிங்கை கைது செய்ய எடுத்து வரும் ஆபரேஷனின் ஒரு பகுதியாக தொடர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாறுவேடத்தில் அம்ரித்பால் சிங்:
இதற்கிடையே, அம்ரித்பால் சிங், மாறுவேடத்தில் இருப்பது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையிடம் சிக்காமல் ஜாக்கெட் மற்றும் பேன்ட் அணிந்தபடி அவர் சாலையில் சுற்றி திரிவது அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. வழக்கமாக, அவர் பாரம்பரிய சீக்கிய உடைகளைதான் அணிந்திருப்பார்.
ஆனால், தற்போது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கண்ணாடி அணிந்து கொண்டு காவல்துறையை அலையவிட்டு வருகிறார். இதற்கு மத்தியில், அம்ரித்பால் சிங், நேபாளத்திற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
சரண் அடைகிறாரா அம்ரித்பால் சிங்?
இந்நிலையில், அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு திரும்பி சென்று காவல்துறையிடம் சரண் அடைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. ஹோஷியார்பூர் வழியாக அமிர்தசரஸ்-க்கு அம்ரித்பால் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது காவல்துறைக்கு அவர் தொடர்பான தகவல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அம்ரித்பால் சிங் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. ஹோஷியார்பூரில் உள்ள மறையன் கிராமத்தில் உள்ள குருத்வாராவில் இன்னோவா காரைத் விட்டுவிட்டு வயல்களுக்குள் தப்பிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து போலீசார் அந்த காரை மீட்டனர்.
முன்னதாக, நேற்று, ஹோஷியார்பூர் மற்றும் அண்டை கிராமங்களில் வீடு வீடாக சென்று காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியது. அம்ரித்பால் சிங் சரணடைவதற்கு முன் சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தப்பிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிகிறது.
கடந்த 1980 மற்றும் 1990களில், பிரிவினைவாத சக்திகளின் காரணமாக பஞ்சாப் வன்முறையில் சிக்கி பற்றி எரிந்தது. தற்போது, மீண்டும் பிரிவினை விவகாரம் பிரச்னையை கிளப்ப தொடங்கியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் விதமாக, காவல்துறையும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
என்னதான் பிரச்னை?
அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 போலீசார் பலத்த காயமடைந்தனர்.