ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தால் மக்களவையும் மாநிலங்களவையும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்பியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி முடங்கியுள்ளது. லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியினரும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சியினரும் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.


நாடாளுமன்றம் தொடர் முடக்கம்:


இந்த நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இன்று நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 


இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 


எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான திட்டம், காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்:


மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து மற்ற கட்சிகளிடம் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 50 எம்பிக்களின் ஆதரவு தேவை.


ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நாடாளுமன்றம் இயங்க வேண்டும். இதற்கிடையே, ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்திற்கு எதிராக செங்கோட்டை அருகே காங்கிரஸ் எம்பிக்கள், தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த கூட்டத்தில், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கேரளா காங்கிரஸ், திரிணாமுல், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாடு, சிவ சேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.


காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த மம்தாவின் திரிணாமுல் கட்சி எம்பிக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.