சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் அம்ரித்பால் சிங். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.


அம்ரித்பால் சிங்கை கைது செய்ய தொடர் தேடுதல் வேட்டை:


லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில், அம்ரித்பாலை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. ஆனால், தற்போது வரை அவர் தலைமறைவாக உள்ளார்.


ஜலந்தரில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அம்ரித்பால் சிங் வேகமாக சென்றிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அப்போதுதான், அவர் கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார். நேற்று கைது செய்யப்பட்ட அவரின் ஆதரவாளர்களிடம் இருந்து பயங்கரமான ஆயுதங்களையும் வெடி பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 


திட்டம் போட்டு தூக்கிய  பஞ்சாப் முதலமைச்சர்:


இதுவரை, அம்ரித்பால் சிங்கின் 7 கூட்டாளிகளை போலீசார்  கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் அவரது அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' உறுப்பினர்கள் பலர் விசாரணைக்காக காவலில் வைப்பட்டுள்ளனர்.  அம்ரித்பாலின் நிதியை கையாளும் தல்ஜீத் சிங் கல்சியும் ஹரியானா மாநிலம் குர்கானில் இருந்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட அவரது நான்கு முக்கிய உதவியாளர்கள் சிறப்பு விமானம் மூலம்  அஸ்ஸாமில் உள்ள திப்ருகாருக்கு கொண்டு செல்லப்பட்டதாக உயர் மட்ட போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவர்கள் திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அம்ரித்பால் சிங்கின் தந்தையும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு:


கடந்த மார்ச் 2ஆம் தேதி,  பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே நடந்த கூட்டத்தில் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்யும் திட்டத்தைப் பற்றி இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய மாநில காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்குவதற்கு முன்பு, மத்திய அரசு பஞ்சாபுக்கு கூடுதல் படைகளை அனுப்பியது.


எப்போதும், ஆயுதமேந்திய ஆதரவாளர்களால் காணப்படும் அம்ரித்பால் சிங், இந்தியாவில் இருந்து காலிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும் என தொடர் பிரிவினை கருத்துகளை தெரிவித்து வருகிறார்.


அம்ரித்பால் சிங் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.