PM Modi : கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


உலக சிறுதானியங்கள் மாநாட்டை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சர்வதேச சிறுதாணியங்கள் ஆண்டு 2023ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றை வெளியிட்டார்.  இந்த மாநாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி பங்கேற்றார்.


அப்போது பாப்பம்மாள் பாட்டி பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு, பிரதமர் மோடி, பாப்பம்மாள் பாட்டியின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார்.  இதனை அடுத்து சிறுதானியங்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், 


”2.5 கோடி விவசாயிகள் பயன்”


”இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023ஆம் ஆண்டை சர்வதே சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்தது. இது நம் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. சர்வதேச அளவில் சிறுதானியங்களை ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய அரசின்  சிறுதானிய திட்டத்தால் நாட்டில் உளள 2.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைவர்.


தினை அல்லது ஸ்ரீ அன்னை சர்வதேச திட்டமாக மேம்படுத்த இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்தியா தற்போது G20 மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறது. அதன் குறிக்கோள் 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்பதே. இதனையே சர்வதேச தினை ஆண்டிலும் பிரதிபலிக்கும். இந்த சிறுதானிய திட்டம் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


"சிறுதானியங்கள் உதவும்"


மேலும், ”நாட்டின் உணவுப் பழக்கத்தில் இப்போது சிறுதானியங்களின் பங்களிப்பு 5 முதல் 6 சதவீதமாக உள்ளது. இந்த பங்கை மேலும் அதிகரிக்க விஞ்ஞானிகளும் வேளாண் நிபுணர்களும் துரிதமாக பணியாற்ற வேண்டும். இதில் எட்டக்கூடிய இலக்கை நாம் நிர்ணயம் செய்ய வேண்டுடம்.  உணவு பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் உதவும்" என்று பிரதமர் மோடி  பேசியுள்ளார்.


இதனை தொடர்ந்து பேசிய அவர், ”நாட்டில்  ஆண்டுக்கு 170 லட்சம் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவு பதப்படுத்தும் துறையில் உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால் உணவுப் பொருள் உற்பத்தியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


முன்னதாக, மார்ச் 5, 2021 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை (UNGA) இந்தியாவின் முன்மொழிவை ஏற்று 2023-ஐ சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா அறிவித்தது. இதன் மூலம், உணவுப் பாதுகாப்பு மற்றும்  ஊட்டச்சத்து தானியங்கள் (தினைகள்) பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவது, ஆராய்ச்சி, முதலீட்டை மேம்படுத்துவது மற்றும் தினைகளின் உற்பத்தி, அதன் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை UNGA நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.