மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி ஆகியோர் நவீன இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்துள்ளார். 


நான்கு குஜராத்திகளுக்கு பாராட்டு:


ஸ்ரீ டெல்லி குஜராத்தி சமாஜ் 125 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அமித் ஷா உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகிய நான்கு குஜராத்திகளும் இந்தியாவின் நவீன வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.


காந்திஜியின் முயற்சியால் நாடு சுதந்திரம் பெற்றது. சர்தார் படேல் காரணமாக நாடு ஒன்றுபட்டது. மொரார்ஜி தேசாயால் நாட்டின் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது. நரேந்திர மோடியால் இந்தியா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு குஜராத்திகளும் மகத்தான சாதனைகளைச் செய்து, ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர்" என்றார்.


ஒன்றுபட்டு வாழும் குஜராத்தி சமூகம்:


தாய் மொழியான குஜராத்தில் தொடர்ந்து பேசிய அவர், "குஜராத்தி சமூகம் நாடு கடந்து உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறது. எந்த சமூகமாக இருந்தாலும், அதனுடன் ஒன்றுபட்டு பணிபுரிகிறது. அதே சமயம் அதற்கு சேவை செய்கிறது. டெல்லியில் வசிக்கும் குஜராத்திகளை அவர்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்துடன் இணைத்து, நாடு மற்றும் சமூகத்தின் சேவையில் அவர்களை ஊக்குவிக்கும் பணியை இந்த அமைப்பு செய்துள்ளது.


125 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இந்த அமைப்பில் தொடர்புடைய அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
குஜராத்தி சமூகம் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. டெல்லியில் வசித்த போதிலும், குஜராத்தி சமூகம் குஜராத்தின் சாரத்தை பராமரித்து, அதன் கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாத்து, அதை முன்னெடுத்துச் சென்றுள்ளது.


ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் டெல்லியில் வசிக்கிறார்கள். குஜராத்தி சமூகமும் நகரத்தில் ஒழுங்கான முறையில் வாழ்ந்து வருகின்றனர்" என்றார்.


மோடியின் சாதனைகள்:


பிரதமராக மோடி, ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, "இந்த காலகட்டத்தில் நாடு பல சாதனைகளை படைத்துள்ளது. 2014இல் மோடி பிரதமரானபோது, ​​உலக அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம், இன்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, உலகில் 5வது இடத்தில் உள்ளது.


இப்போது சர்வதேச நிதியம் உட்பட பல நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒரு பிரகாசமான இடமாக பார்க்கின்றன. மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, இந்தியாவின் எல்லையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்ற செய்தியை இந்தியா உலகிற்கு வழங்கியது.


130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டில், கோவிட் தடுப்பூசி இயக்கம் சுமூகமான முறையில் நடத்தப்பட்டது.
பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராக மாறியுள்ளது. இந்தியா ஸ்டார்ட்அப் துறையில் மூன்றாவது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளது" என்றார்.