காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியை எட்டி உள்ளது.
நடைபயணத்தில் யாத்திரீகர்கள் தூங்குவதற்காக பயன்படுத்தப்படும் கண்டைனரின் பராமரிப்புக்காக ராகுல் காந்தியின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை சரமாரி குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நடைபயணத்தின் போது, பாதுகாப்பு நெறிமுறைகளை நான் மீண்டும் மீண்டும் மீறுவதாக பாதுகாப்புப் படையினரை சொல்ல வைத்ததன் மூலமும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபயணத்தை நிறுத்துமாறு கடிதங்களை அனுப்புவதன் மூலமும் பாஜக தலைமையிலான அரசாங்கம் காரணமின்றி என் மீது வழக்கு பதிவு முயற்சிக்கிறது.
நீங்கள் குண்டு துளைக்காத வாகனத்தில் செல்லுங்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. நான் அதை எப்படி செய்ய முடியும்? நடைபயணத்திற்கு நான் கால் நடையாக நடக்க வேண்டும். பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், இதை பிரச்னை ஆக்குகிறார்கள்.
வெறுப்புக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதே நடைபயணத்தின் நோக்கமாகும். இது எங்களுக்கு ஒரு வெற்றிகரமான நடைபயணம். இது பல சாதனைகளை படைத்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டை சிந்திக்க வைப்பதற்கு ஒரு புதிய வழியை வழங்க முயற்சிக்கிறேன். பாஜக பல பிரச்சாரங்களை செய்கிறது. ஆனால், உண்மையை எதிர்த்து அதனால் போராட முடியாது.
அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் சத்தியத்துடன் போராட முடியாது. எந்த முன் யோசனையும் இன்றி நடைபயணத்தை தொடங்கினேன்.
இந்த பயணத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அது நம்மை வலுவாக்க உதவுகிறது. அவர்கள்தான் என் குரு" என்றார்.