இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் கே.சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.


அதை தொடர்ந்து 2018ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே வெற்றிபெற்றது.
கடந்த 9 ஆண்டுகளாக, சந்திரசேகர் ராவ்தான் தெலங்கானா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைத்திராத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. 


தெலங்கானாவை குறிவைக்கும் பாஜக:


இப்படிப்பட்ட சூழலில், தெலங்கானாவில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.


அதுமட்டும் இன்றி, மக்களவை தேர்தலில் தெலங்கானாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியை களமிறக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்த பாஜக வியூகம் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக ஆக்கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.


பாஜகவின் செம்ம பிளான்:


சூர்யாபேட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி ஏழைகளுக்கு எதிராக உள்ளது. தலித்களுக்கு எதிராக உள்ளது. நலிவடைந்த பிரிவினருக்கு எதிராக உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து, குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறது.


முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ். மற்றும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சி ஆகியவை கே.டி. ராமராவை முதலமைச்சராகவும், ராகுல் காந்தியை பிரதமராகவும் ஆக்க ஆர்வமாக உள்ளது. ஆனால், தெலங்கானாவின் வளர்ச்சியிலோ நலனிலோ அல்ல ஆர்வம் காட்டவில்லை.


பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி, ஏழைகள் அல்லது சாமானியர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியால் தெலங்கானாவை மேம்படுத்த முடியும். நீங்கள் அவரை இன்னொரு முறை பிரதமராவதற்கு ஆதரிக்கப் போகிறீர்களா இல்லையா?" என்றார்.


சந்திரசேகர் ராவ் அளித்த வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பிய அமித் ஷா, "தலித் ஒருவரை முதலமைச்சராக்கும் வாக்குறுதி என்ன ஆனது? தலித்துகளின் வளர்ச்சிக்காக 50,000 கோடி ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது என்ன ஆனது? பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான 1,000 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது" என்றார்.