பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும், அவருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கவுரி பொறுப்பேற்றுகொண்டார்.


விக்டோரியா கெளரி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வைகை மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், கொலீஜியம் பரிந்துரை செய்துள்ள விக்டோரியா கவுரி பாஜக நிர்வாகியாக இருந்தவர் என்றும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியவர் என்றும் அவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், 1992 குவாஹத்தி நீதிபதியாக ஸ்ரீவத்சவா நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பே தடைவிதித்தது. இதனையும் தன் மனுவில் மேற்கோள் காட்டியிருந்தார். விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று காலை 10.35க்கு பதவியேற்கவிருந்த நிலையில் 10.30 மணிக்கு இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 


விக்டோரியா நியமனத்துக்கு அவசரமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், விக்டோரியா கவுரியை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கவில்லை. அவரது வெறுப்புப் பேச்சுகளுக்காகவே எதிர்க்கிறோம். நீதிபதியாக பதவியேற்க விக்டோரியா தகுதியற்றவர் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.


வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனுதாரர் வைக்கும் குற்றசாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்? 2018ல் இருந்து விக்டோரியா கவுரி பேசியதை கொலீஜியம் குழு பார்த்திருக்கும். அரசியல் பின்னணியில் உள்ளவர்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகதான் விக்டோரியா பதவியேற்கிறார் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், நீதிபதியாவதற்கான தகுதிகளை மட்டுமே பார்க்கமுடியும். ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.


இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்கும் நிகழ்வு தொடங்கியது. அதே சமயம் விக்டோரியா கெளரி பதவி நியமனத்தை எதிர்த்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தினர். வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே விக்டோரியா கவுரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.


விக்டோரியா கவுரி நியமனத்திற்கு தடை விதிக்கமுடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.