திமுக தலைவராக 2வது முறையாக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அதேபோல், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்படுகிறார்கள். 


பொதுக்குழு கூட்டம்:


தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவி மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 


இந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியிடுகின்றனர்.


வேட்பு மனு தாக்கல் நிறைவு:


இதன்படி, இன்று தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் மற்றும் நிர்வாகிகள் தேர்வுக்கு காலை 10 மணி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.


இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக தலைவர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.


மேலும், பொதுச் செயலாளர், பொருளாளர் பொறுப்பிற்கும் துரைமுருகன், டி.ஆர்.பாலுவை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 






போட்டியின்றி தேர்வு:


இந்நிலையில் இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால், போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக நாளை மறுநாள் நடைபெறும் பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்நிலையில், தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத காரணத்தால், மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி வகிப்பார்.


அதை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு எம்.பி., டி.ஆர்.பாலுவும் பதவி வகிப்பர்.


வழக்கமாக, தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தான் நடைபெறும். ஆனால், இந்த முறை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாக மைதானத்தில், வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Also Read: TN Assembly Session: வரும் 17-ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை: விவாதிக்க உள்ள பிரச்சினைகள் என்ன?