பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி சந்திப்பு:
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி கணக்கு, வியூகங்களை வகுப்பது, எதிர்க்கட்சி கூட்டணியை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த குழுக்கள் உடன் பிரதமர் மோடி தற்போது தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், இரண்டு தினங்களுக்கு முன்பாக தென்னிந்தியாவை சேர்ந்த கூட்டணி கட்சி எம்.பிக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அவியல், ஆப்பம் சூப்பர்..!
இரண்டு தினங்களுக்கு முன்பாக நடந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”நேற்று மாலை, தென்னிந்தியாவைச் சேர்ந்த என்.டி.ஏ. எம்.பி.க்களுடன் ஒரு அற்புதமான சந்திப்பை மேற்கொண்டேன். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்தில் பணியாரம், அப்பம், வெஜிடபிள் குர்மா, புளியோதரை, பப்பு சாறு, அடை அவியல் மற்றும் பல தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. இரவு உணவு அருமையாக இருந்தது.” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பிதுரை, ஜி.கே. வாசன் உள்ளிட்ட எம்.பிக்களுடன் சேர்ந்து மேசையில் வட்டமாக அமர்ந்து, வாழை இலையில் உணவு உண்ணும் புகைப்படத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதன் கீழே வந்துள்ள கமெண்ட்களுக்கு, பிரதமர் கணக்கிலிருந்து பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பற்றி எரியும் மணிப்பூர்:
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை, 3 மாதங்களை கடந்தும் கட்டுக்கடங்காமல் நிடித்து வருகிறது. அதன் உச்சபட்சமாக பழங்குடியின பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த மாதம் வீடியோ வெளியான பிறகு தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முடங்கும் நாடாளுமன்றம்..
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதோடு, விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
குவியும் விமர்சனங்கள்:
இந்நிலையில் தென்னிந்திய உணவுகள் அருமையாக உள்ளது என பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவின் கீழ் வெளியாகியுள்ள கமெண்ட்களில் “பாஜக ஆளும் மாநிலங்களான மணிப்பூரில் சாதிய வன்முறையும், ஹரியானாவிலும் மதக்கலவரமும் வெடித்துள்ளது. இதுதொடர்பாக வாய் திறக்கமாட்டீர்களா? இதே சூழல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இருந்திருந்தால் மத்திய அரசு இப்படி அமைதியாக இருந்து இருக்குமா? நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஏன் இதுவரை ஒருநாள் கூட பங்கேற்கவில்லை? தேர்தல் பணிகளில் மட்டும் தீவிரம் காட்டுகிறார், கமெண்ட்களுக்கு பதில் கொடுக்க முடிகிறது மணிப்பூர், ஹரியானா பற்றி பேசமுடியவில்லையா?” என சரமாரியான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.