Operation Sindhu: ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் முதற்கட்டமாக புறப்பட்ட 110 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர்.
ஆப்ரேஷன் சிந்து:
ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு வருவது, பிரச்னையை மேலும் விபரீதமாக மாற்றுவதாக உள்ளது. இந்நிலையில் தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை ”ஆப்ரேஷன் சிந்து” என்ற பெயரில் இந்தியா தொடங்கியுள்ளது. அதன்படி, வடக்கு ஈரானில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு 110 இந்திய மாணவர்கள் கடந்த 17ம் தேதி பாதுகாப்பாக அர்மீனியா அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி வந்தடைந்த இந்திய மாணவர்கள்:
110 மாணவர்கள் கொண்ட குழு, ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் வடக்கு ஈரானின் உர்மியா நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, ஆர்மீனிய தலைநகர் யெரெவனுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இந்திய அதிகாரிகள் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் ஏறியுள்ள அந்த குழு, இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தனர். இதுகுறித்த வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில். ”வெளிநாடுகளில் உள்ள நமது நாட்டினரின் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளிப்பதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. உர்மியா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 110 மாணவர்களில், 90 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என்று ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் சொல்வது என்ன?
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீட்கப்பட்ட மாணவன் அமான் அஜார், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இறுதியாக என் குடும்பத்தினரைச் சந்திக்க முடிந்ததில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. ஈரானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள் எங்களைப் போலவே இருக்கிறார்கள்; சிறு குழந்தைகள் துன்பப்படுகிறார்கள். போர் ஒரு நல்ல விஷயம் அல்ல. அது மனிதகுலத்தைக் கொல்கிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் மோதல்:
ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் ஏவுகணை திறன்களை தகர்க்கும் நோக்கில், இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் இப்போது ஆறாவது நாளை எட்டியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக, சுதந்திரமான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இந்தியர்கள் தெஹ்ரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, சிலர் ஆர்மீனியா எல்லை வழியாக ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.