அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தாண்டு செப்டம்பர் மாதம், இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பைடனின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


முக்கியத்துவம் வாய்ந்த பயணம்:


தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் டொனால்ட் லு இதுகுறித்து வரிவாக பேசுகையில், "இது ஒரு பெரிய ஆண்டாக இருக்கும். நிச்சயமாக, இந்தியா G-20 உச்ச மாநாட்டை நடத்துகிறது. இந்த ஆண்டு, அமெரிக்கா ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டை நடத்துகிறது. 


ஜி7 மாநாட்டை ஜப்பான் நடத்துகிறது.  ஏராளமான குவாட் உறுப்பினர்கள் தலைமைப் பாத்திரங்களை வகிக்கின்றனர். மேலும் இது நம் அனைவருக்கும் நமது நாடுகளை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது" என்றார்.


இந்திய பயணம் குறித்து விரிவாக பேசிய அவர், "செப்டம்பரில் இந்தியாவுக்குப் பயணம் செய்ய அமெரிக்க அதிபர் ஆவலுடன் காத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கபோகிறது என்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.


புத்தாண்டு முடிந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ளன. இதில், பல அற்புதமான விஷயங்கள் நடந்துள்ளன. மார்ச் மாதம், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது குவாட் சகாக்களுக்கு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினார். ரைசினா உரையாடலின்போது, நான்கு வெளியுறவு அமைச்சர்களுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


குவாட் வெளியுறவு அமைச்சர்களின் முதல் பொது விவாத நிகழ்ச்சி இதுவாகும். கடைசியாக, இந்த மாதம், புதிய தூதராக எரிக் கார்செட்டி நியமிக்கப்பட்டார். அமெரிக்க தூதரகத்தில் உள்ள இந்திய மற்றும் அமெரிக்க ஊழியர்களிடமிருந்து அவருக்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.


இரு நாட்டு உறவு அடுத்தக்கட்டத்திற்கு செல்லுமா?


அவர் இந்தியாவின் பிற பகுதிகளைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறார். மேலும் அவர் உற்சாகமாகவும், நமது உறவுகளை புதிய உயரத்திற்குக் கொண்டு வர ஆர்வமாகவும் இருப்பதை இந்தியா அறிந்து கொள்ளும் என்று நினைக்கிறேன்.


கடந்த மாதம் G-20 வெளியுறவு அமைச்சர் கூட்டத்தை நடத்தியதன் மூலம் இந்தியா செய்த மகத்தான பணிக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் G-20 கூட்டங்கள், இந்திய தலைவர்களுடனான உச்சி மாநாடு உட்பட அனைத்திலும் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.


G-20 நாடுகள் கூட்டு நடவடிக்கைக்காக எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதை நாம் பார்த்தோம். மார்ச் மாதத்தில் நடந்த இந்த சந்திப்பு விதிவிலக்கல்ல" என்றார்.