அமர்நாத்தில் மேக வெடிப்பினால் கொட்டிய கனமழையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அமர்நாத் குகை பனிலிங்கம் அமைந்துள்ளது. இதனை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புனித பயணம் கடந்த மாதம் ஜூன் 30 ஆம் தேதி தொடங்கியது. இது ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமர்நாத்தின் பனிலிங்கத்தை நாள்தோறும் தரிசிக்க ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே மோசமான வானிலை காரணமாக கடந்த 2 நாட்களாக புனித பயணம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் வானிலை சரியானதையடுத்து மீண்டும் புனித யாத்திரை நேற்று தொடங்கிய நிலையில், அமர்நாத் குகை அருகே மாலை 5.30 மணியளவில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பக்தர்கள் முகாம்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனையடுத்து அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக மீட்பு பணிகளில் இந்திய ராணுவத்தின் மீட்புக்குழு ஈடுபட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவு, சுமார் 40 பேரை காணவில்லை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் சுமார் 15,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்