மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது, நீண்ட காலத்திற்கு தனியாக விட்டு சென்றது ஆகியவற்றின் அடிப்படையில் கணவர் ஒருவர் விவாகரத்து கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தகுந்த காரணம் இன்றி கணவனையோ மனைவியையோ நீண்ட காலத்திற்கு பாலியல் உறவு கொள்ள அனுமதிக்காமல் வைத்திருப்பது இணையருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்" என தெரிவித்தனர்.


"பாலியல் உறவு கொள்ள அனுமதிக்காமல் வைத்திருப்பது இணையருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்"


முதலில், குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், குடும்ப நல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி, "கணவர் அசல் ஆவணங்களுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆவணங்களின் நகல்களை சமர்ப்பித்தார்" என கூறி, இந்து திருமண சட்டம், 1955இன் கீழ், விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார். 


இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது, நீண்ட காலத்திற்கு தனியாக விட்டு சென்றது ஆகியவற்றின் அடிப்படையில் கணவர் விவாகரத்து கேட்டிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "இருவரும், 1979ஆம் ஆண்டு, மே மாதம் திருமணம் செய்து கொண்டோம். 


விவாகரத்து வழக்கு:


சிறிது காலத்திற்குப் பிறகு, எனது மனைவியின் நடத்தை மாறியது. மேலும், என்னுடன் மனைவியாக வாழ அவர் மறுத்துவிட்டார். அவரை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், அவர் என்னுடன் எந்த உறவையும் ஏற்படுத்தவில்லை. சிறிது காலமே என்னுடன் வாழ்ந்து வந்தார். ​​இறுதியில், அவர் பெற்றோரின் வீட்டில் தனியாக வாழத் தொடங்கினார்.


திருமணமான முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு, தனது வீட்டிற்கு திரும்பும்படியும், திருமண கடமையை நிறைவேற்றவும், திருமண பந்தத்தை மதிக்கும்படியும் மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் மறுத்துவிட்டார்.


கடந்த 1994ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சமூக விதிகளின்படி, கணவர் பஞ்சாயத்து கூட்டத்தை நாடினார். மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சமாக ₹22,000 செலுத்திய பின்னர் தம்பதியினர் விவாகரத்து ஒப்புக் கொண்டனர்.


இதையடுத்து மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கணவர் விவாகரத்து கோர முயன்றபோது, ​​அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வழக்கை நீதிபதிகள் சுனீத் குமார் மற்றும் ராஜேந்திர குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனர்.


அப்போது பேசிய நீதிபதிகள், "நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவரின் கூற்றுப்படி, அவர்களுக்கிடையேயான திருமண பந்தத்தை மனைவி மதிக்கவில்லை. இதனால் அவர்களின் திருமண உறவில் முறிவு ஏற்பட்டது.


இணையருடன் கட்டாயப்படுத்தி வாழ்க்கையை தொடர வைப்பது ஏற்று கொள்ள முடியாது. திருமண உறவில் இரு தரப்பையும் நிரந்தரமாக சேர்த்து வைப்பதற்காக அட்வைஸ் கொடுப்பதை விட அதை ரத்து செய்துவிடலாம்" என்றனர்.