பல்வேறு அரசியல் சட்டங்கள் இருந்தாலும் ஒருசில அரசியல் சட்டங்கள், சட்டப்பிரிவுகள் அதிகம் விவாதிக்கப்படுவதாக இருக்கிறது. அப்படியொரு சட்டம் தான் உபா என்றழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19 சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது. 


அதன்படி, 1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம். 2. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம். 3. கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம். 4. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம். 5. இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம்.6. தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம். ஆகியனவற்றை வழங்கியுள்ளது. இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.


இருப்பினும், இந்திய இறையான்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க அரசியல் சாசனம் அளித்துள்ள இந்த சுதந்திரங்களை மேலும் ஒரு வரையறைக்குள் கொண்டு வர அரசு முடிவு செய்தது. 1967ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. UAPA (Unlawful Activities Prevention Act) உபா என்றழைக்கப்படும் இந்தச் சட்டம், ஏதோ சட்டவிரோதம், எது தீவிரவாதம் என்பதை சரிவர விளக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இச்சட்டம் இயற்றப்பட்ட காலம்தொட்டு இன்றுவரை நீடித்து வருகிறது.


ஏன் இந்த குற்றச்சாட்டு?!


இந்தச் சட்டத்தின் 35வது பிரிவு மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அரசாங்கம் நினைத்தால் எந்த ஓர் இயக்கத்தையும் தீவிரவாத இயக்கமாக அறிவிக்க முடியும். அவ்வாறு அரசு அறிவிக்கும்பட்சத்தில் அந்த இயக்கத்தைச் சார்ந்தோர் அனைவருமே தீவிரவாதிகள் என்ற பட்டியலுக்குள் வந்துவிடுவார்கள். நீங்கள் அரசு தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, அந்த இயக்கத்தை ஆதரித்துப் பேசினாலோ, அல்லது அந்த இயக்கத்தின் வெளியீடுகளை உங்கள் வசிப்பிடத்தில் வைத்திருந்தாலோ கூட நீங்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. இதுதான் இந்தச் சட்டத்தை ஒரு பூதாகரமானதாகக் காட்டுகிறது.


இதுமட்டுமல்ல இன்னும் இருக்கிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 43 என்ன சொல்கிறது என்று பாருங்கள். 43வது சட்டப்பிரிவின்படி குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபரை 30 நாட்கள் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாம். மேலும், அந்த நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையும் இன்றி நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம். அதுமட்டுமல்லாது 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே அந்த நபரை சிறையில் அடைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தச் சட்டத்தின் கீழ் கைதானோர் முன் ஜாமீனே பெற முடியாது. ஜாமீனிலும் வெளிவர முடியாது. இவர்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டும். நீதிமன்ற விசாரணை பத்திரிகையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அப்பாற்பட்டது. இதனாலேயே இந்தச் சட்டம் ஒரு கருப்புச் சட்டமாகக் கருதப்படுகிறது.


மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பார்வையில் உபா:


இதனை அடக்குமுறைச் சட்டம் என்றழைக்கு சில சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள். இந்தியாவுக்கு இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்கள் புதிதல்ல எனக் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக தடா, பொடா போன்ற சட்டங்கள் அமலில் இருந்ததை அவர்கள் இதற்குச் சான்றாக சுட்டிக்காட்டுகின்றனர்.


தடா (TADA), பொடா(POTA) சட்டங்களுக்கு நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவ்விரு சட்டங்களும் திரும்பப்பெறப்பட்டன.


ஆனால், அதன்பின்னர் உபா சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2004, 2008 மற்றும் 2012 என மூன்று முறை உபா சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திருத்தங்கள் உபா சட்டத்திற்கு இன்னுமொரு முகம் கொடுத்து அதை தடா, பொடாவின் கொடூரங்களையும் உள்ளடக்கிய ஒரு சட்டமாக மாற்றியுள்ளது என்பதே சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.