கொரோனாவால் இறந்தோரின் அஸ்தியைக் கொண்டு பூங்கா ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. எங்கே என்கிறீர்களா? மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில்தான்.


போபால் நகரின் பதப்தா விஷ்ராம்காட்டில் தான் இந்தப் பூங்கா அமையவுள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இப்பகுதியில் மட்டும் சுமார் 6000 சடலங்கள் எரியூட்டப்பட்டன. அத்தனையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் சடலங்கள். உறவினர்களோ, எரியூடப்பட்டவரின் ஒருசில எலும்புத் துண்டுகளை மட்டுமே சடங்குகளுக்காகப் பெற்றுச் சென்றனர்.


ஆனால், அஸ்தியைப் பெறவில்லை. இந்நிலையில் 21 லாரிகள் நிரம்ப அஸ்தி சேர்ந்துவிட்டது. இதனால் இவற்றை அப்புறப்படுத்துவது அரசுக்குப் பெரும் சவாலானது.


இந்நிலையில்தான், இந்த அஸ்தியைக் கொண்டு ஒரு பூங்கா அமைக்க, பதப்தா விஷ்ராம்காட்டின் இடுகாடு நிர்வாகம் முடிவு செய்தது. 24 லாரி சாம்பலையும் நர்மதா ஆற்றில் கொட்டினால் ஆறு தூய்மை கெட்டுவிடும். அதனாலேயே பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளோம் என பதப்தா விஷ்ராம்காட்டின் இடுகாட்டின் பொறுப்பு அதிகாரி மம்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12,000 சதுர அடியில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. அஸ்தியுடன், சாணம், மரத்தூள் ஆகியனவற்றைக் கொண்டு பூங்காவை அமைக்கிறோம்.


மேலும் இந்தப் பூங்காவை அமைக்க ஜப்பானின் மியாவாகி காடு வளர்க்கும் திட்டத்தைப் பயன்படுத்துகிறோம். அதற்காக பூங்காவில் 4000 வகையான மரக்கன்றுகள் நடப்படும். இந்தச் கன்றுகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட்டால் 15 முதல் 18 மாதங்களில் மரங்களாக வளர்ந்துவிடும். பூங்காவில் மரக்கன்று நடும் பணிக்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் அஸ்திக்கு உரிமையுடைய உறவினர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பூங்கா அமைப்பதற்கான கமிட்டி தலைவர் அருண் சவுத்ரி கூறியிருக்கிறார். அஸ்தியில் உருவாகவுள்ள இந்தப் பூங்கா உறவினர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


மியாவாகி காடுகள் என்றால் என்ன?


குறைவான இடங்களில் அதிகமான மரங்களை வளர்த்து குட்டிக்குட்டி காடுகளை உருவாக்கும் ஜப்பான் நாட்டின் முறைதான் மியாவாகி. ஜப்பான் நாட்டைச் சர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி அந்நாட்டில் மரங்கள் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர்வதற்கான புதிய மரம் வளர்ப்பு முறையை கண்டுபிடித்தார். ‘இடைவெளி இல்லாத அடர்காடு’ என்கிற இவரோட தத்துவப்படி குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை நடலாம். மரங்களும் வேமாக வளர்வதை அகிரா மியாவாக்கி நிரூபித்தார்.


இந்த முறையில் ஜப்பான் நாட்டில் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு குட்டி குட்டி காடுகளை உருவாக்கி உள்ளார். அதனால், இவரது பெயரில் அவரது மரம் வளர்ப்பு முறைக்கு ‘மியாவாகி’ என்று பெயிரிடப்பட்டுள்ளது. மியாவாகி முறையில் நடப்படும் மரங்களும், வேகமாக வளர்ந்து நிழலுக்கு நிழலும், சுவாசிக்க சுத்தமான காற்றும் கொடுக்கிறது. இதனாலேயே, உலகம் முழுவதுமே இந்த முறையில் காடு வளர்ப்பது பிரபலமாக இருக்கிறது.