இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130-இல் இருந்து ஒரு கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,104 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 553-ல் இருந்து ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657-ஆக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வரும் நிலையில் ஏற்கனவே சில நாடுகள் இந்தியாவை சிவப்பு மண்டலமாக அறிவித்து அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வரும் 25-ஆம் தேதி (ஏப்ரல் 25, 2021) முதல் இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் அனைத்து விமானங்களும் 25-ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று அமீரக சிவில் ஏவியேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. அதே சமயம் அமீரை குடியுரிமை மற்றும் அரசு பணி சார்ந்து பயணம் செய்வோருக்கு இந்த தாடை பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி வழங்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் முன்பைவிட அதிதீவிரமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.