ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரஜாபாத். அவரது மனைவி சுகி தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகிதேவிக்கு கடந்த மாதம் அம்மாநிலத்தின் நகவுர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாயும், சேயும் நலமாக மருத்துவமனையில் இருந்து, சுகிதேவியின் கிராமமான ஹர்சோலாவ் கிராமத்திற்கு சென்றனர்.
ஹனுமன் பிரஜாபாத் குடும்பத்தில் கடந்த 35 வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்ததால், அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து, புதியதாக பிறந்த குழந்தைக்கும், குழந்தையின் தாய்க்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, குழந்தையையும், தாயையும் அவர்களது சொந்த கிராமத்தில் இருந்து ஹனுமன் பிரஜாபாத்தின் இல்லத்திற்கு ஹெலிகாப்டரில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. இரு வீட்டாருக்கும் இடையே உள்ள 40 கிலோ மீட்டர் தொலைவில் வானில் பறப்பதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு பிடித்தனர்.
இந்த ஹெலிகாப்டரில் புதியதாக பிறந்த குழந்தை, சுகி தேவி பிராஜாபாத்தின் சொந்த கிராமத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். இந்த ஹெலிகாப்டரின் வாடகை மட்டும் சுமார் 4.5 லட்சம் ஆகும். அந்த பெண் குழந்தைக்கு ரியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரியாவின் தந்தை பிரஜாபாத் கூறும்போது, “மக்கள் பெண் குழந்தை பிறப்பதை பெரிதாக கொண்டாடுவதில்லை. ஆனால், பெண் குழந்தைக்கும், ஆண் குழந்தைக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லை. எனது மகளை படிக்கவைப்பதுடன் அவளது அனைத்து கனவுகளையும் நிறைவேற்றுவேன்” என்று ஆனந்தமாக கூறினார்.
பெண் குழந்தையையும், அந்த குழந்தையின் தாயையும் ஹெலிகாப்டரில் அழைத்து வந்ததை அந்த கிராமத்தினர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதை வீடியோவாக எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இது வைரலாகி வருகிறது.