கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலானவர்களுக்கு  ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மருந்து தட்டுபாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் தொடர்பாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்தின் கேள்விகளுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் நிஸ்சல் பதிலளித்துள்ளார்.

  


கே: கொரோனா நோய் தொற்று உடையவர்களுக்கு ரெம்டெசிவிர் எவ்வளவு முக்கியமானது?


ப: ரெம்டெசிவிர் என்பது எபோலா வைரஸ் நோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து வைரஸின் மரபணுவில் சென்று அது இரட்டிப்பாவதை தடுக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்த மருந்து ஒரு தீர்வு ஆகாது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பலருக்கு இந்த மருந்து தேவைப்படாது. 


கே: தேவையில்லாமல் ரெம்டெசிவிர் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அனைவருக்கும் இந்த மருந்து தேவைப்படுமா?


ப: கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவசர நிலையில் பயன்படுத்தவே ரெம்டெசிவிர் மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பலர் தேவையில்லாமல் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். இம்மருந்தை ஒரு குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்கும் இதை பயன்படுத்த தேவையில்லை.




 


கே: ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவமனைகளுக்கு அளிக்காமல் நோயாளிகளுக்கே நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. தேவையில்லாமல் இம்மருந்தை பயன்படுத்தினால் பாதிப்பு வருமா?


ப: ரெம்டெசிவிர் மருந்தை ஊசியின் மூலம் தான் உடலில் செலுத்த முடியும். எனவே இந்த மருந்தை உடலில் செலுத்திய உடன் ஒரு சிலருக்கு அலர்ஜி போன்ற உபாதைகள் வரலாம். மேலும் இதயம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் சில பாதிப்பு ஏற்படலாம். எனினும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பு ரெம்டெசிவிர் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் சர்வதேச சுகாதார மையத்தின் ஆய்வில் ரெம்டெசிவிர் பயன்பாட்டால் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு சில நோயாளிகள் ஆக்சிஜன் குறைபாடு உடன் இருந்தபோது ரெம்டெசிவிர் கொடுத்தால் மரணம் அடையாமல் காப்பாற்றப்பட்டனர். அந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அதை வைத்து ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. எனவே இந்த மருந்து ஒரு சிலருக்கு பயன் அளிக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால் அனைவருக்கும் பயன் அளிக்காது என்பதும் இந்த ஆய்வில் தெரிகிறது. 


கே: ரெம்டெசிவிர் மருந்து எபோலா நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏதாவது உண்டா?


ப: ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தினால் சிலருக்கு வாந்தி, மூச்சுப் பிரச்னை, இதய துடிப்பு குறைதல் , இரத்தத்தில் சர்க்கரை அளவில் மாறுபாடு உள்ளிட்டவை ஏற்படலாம். தற்போது வரை இந்த மாதிரியான விளைவுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.