உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற வைரஸ்கள் ஏதாவது பரவிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.
ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்:
இந்த நிலையில் தான், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளனர். சதகுட்லா மற்றும் கும்மல்லடிப்பா பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்ததால் அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.
கோழி இறைச்சியில் இருந்து மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள பரிசோதனை மையத்துக்கு கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அப்போது, பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து, நோய் பரவலை தடுக்க கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டன. கோழிகள் இறந்த பகுதியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோழிக் கடைகளை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோழிக் கடைகளை ஒரு மூன்று மாதங்களுக்கு மூடவும் மாவட்ட நிர்வாம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் என்ன?
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரி கூறுகையில், "கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் நபர்கள் எச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இறந்த பறவைகளை முறையாகப் புதைக்க வேண்டும். கண்மூடித்தனமாக அப்புறப்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள கோழிப்பண்ணைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை மூடுவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.
நோய் பரவுவதை தடுக்க நெல்லூரில் உள்ள மற்ற இடங்களில் அமைந்துள்ள கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 721 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
5 மாவட்டங்களுக்கு அலர்ட்:
அண்டை மாநிலமான ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து, தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலர்ட்டை சுகாதாரத்துறை விடுத்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Yashasvi Jaiswal Century: நான் அடிச்சா அதிரடி! மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல்