தெற்கு வங்கக் கடலில் கடந்த 14ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அக்வான் புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

Continues below advertisement

ஆக்ரோஷமாக இருக்கும் அக்வான் 

இந்த புயல் ஆந்திரா மாநிலத்தின் நரசாபுரம் முதல் ஒடிசாவின் பூரிக்கும் இடையே நாளை நண்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், அதிகபட்சம் 110 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. புயல் வேகமாக நகர்வதை காட்டிலும் மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதால் அதிக மழைப்பொழிவை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ரெட் அலர்ட் எச்சரிக்கை 

இதன் காரணமாக இன்று ஒடிசாவில் மாநிலத்தில் கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், புரி, கஞ்சம், கஜபதி, கந்தமால் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதி பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புயல் எச்சரிக்கையை அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் எடுத்து வருகின்றது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். ஒடிசாவில் 141 பகுதிகள் நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தளங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

இதனிடையே இன்று தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சிஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சிஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.