இந்தியக்கல்வி ஆராய்சியாளர்களுக்கு ஒருவருடத்திற்கு CHAT GPT PLUS சேவையை இலவசமாக வழங்க உள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனம் தனது கல்விசார் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக இச்செயல்முறை அமைந்துள்ளது.சிக்கலான தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது முதல் ஆராய்ச்சி கட்டூரைகளை எழுதுவது வரை, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களின் அன்றாட அறிவியல் பணிகளை விரைவுபடுத்துவதற்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பெறுவோர் யார்?
உயிரியல் அறிவியல், வேதியியல், கணினி அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இச்சேவையை பெறத்தகுதியானவர்கள் எனவும், 50,000 மானியங்களுக்கான விண்ணப்பப்பதிவு வருகிற 30-ஆம் தேதிமுதல் தொடங்கப்பட உள்ளதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் CHAT GPT PLUS சேவையை முழுமையாக கல்வி சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென திட்டவட்ட கூறியுள்ள ஓபன் ஏஐ நிறுவனம், பயனாளர்களின் தரவு பாதுகாப்புத்தன்மை உறுதிசெய்யப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபன்ஏஐ நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் கல்விப் பிரிவின் தலைவர் ராகவ் குப்தா, கல்விசார் ஆராய்ச்சி பணிகளுக்கு ChatGPT-ஐ அணுகுவதில் இந்திய கல்வி நிறுவனங்கள் அதிக அளவிலான ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
