பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் 'பான் மசாலா' விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். ‘புகையிலை பொருட்களின் விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்'  என்று தெரிவித்துள்ளார்.


பான் மசாலா விளம்பரத்தில் நடித்த அக்ஷய் குமார் மீது அதிருப்தி கொண்ட ரசிகர்கள், மீம்களாலும், ட்ரோல்களாலும் அவரை விமர்சித்தனர். இதையெடுத்து அக்ஷய் குமார் தன் செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.


அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இதற்காக அவரின் ரசிகர்கள் அக்ஷய் குமாரை கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்போது ரசிகர்களின் எதிர்ப்புக்கு குரலுக்கு செவிசாய்த்து புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.






இதுதொடர்பாக அக்ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "ரசிகர்கள் மற்றும் என் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினையும் கடந்த சில நாட்களாகவே என்னை வெகுவாக பாதித்துள்ளது. இனி நான் புகையிலை பொருட்களை பரிந்துரைக்க மாட்டேன். உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து விமல் எலாச்சி நிறுவனத்துடன் எனது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்கிறேன். நான் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் முடிவை மாற்றிக் கொள்கிறேன். இந்த விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த ஊதிய தொகையை வேறு ஏதேனும் நல்ல காரணத்திற்காக பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் எனது விளம்பரத் தேர்வுகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். அதற்கு பதிலாக என்றென்றும் உங்களின் அன்பைக் கேட்பேன்" என்றும் வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.


பாலிவுட் நடிகர்களிலேயே நடிகர் அக்ஷய் குமார் மிகவும் வித்தியாசமானவர். கதை தேர்வு மற்றும் ஒரு விஷத்தை அணுகுவது போன்றவைகளில் மற்ற நடிகர்களிடமிருந்து இருந்து முற்றிலும் வேறுபட்டவர், அக்ஷய் குமார்.


அக்ஷய் குமார் நடிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே வழக்கமான பாலிவுட் நடிகர்கள் போல அல்லாமல், பாலிவுட்டிற்கென இருக்கும் ஒரு கலாச்சாரத்தில் இருந்து விலகி இருந்தவர். அவரை இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளிலோ, மது விருந்திலோ பார்க்க முடியாது. உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர். புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது. இவை அவரே பலமுறை தனது பேட்டிகளில் கூறியது. அக்ஷய் குமாரின் ஃபிட்னஸ், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றிற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதுவரை, அக்ஷய் குமார் சிகரெட், மதுபான விளம்பரங்களில் நடித்ததில்லை. ஆனால், தற்போது இந்த பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்திருப்பது அவர் மீதான மரியாதைக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.