திரைப்படத்துறையை தெற்கு மற்றும் வடக்கு எனப் பிரித்தாளுவது தனக்குப் பிடிக்கவில்லை என நடிகர் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார். ஆங்கிலேயர்கள் நம்மை அப்படித்தான் பிரித்து ஆள முயற்சி செய்தார்கள் என்றும் இருப்பினும் அதிலிருந்தும் நாம் எதுவும் பாடம் கற்கவில்லை என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். மனுசி சில்லார், சோனு சூட் மற்றும் சஞ்சய் தத்துடன் இணைந்து அவர் நடித்து வரும் பிருத்விராஜ் படத்துக்காகத் தயாராகி வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.







அக்ஷய்யின் புதிய படம், பிருத்விராஜ், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இந்தப் படம் மன்னன் பிருத்விராஜ் சவுகானைப் பற்றியது. மேலும் நடிகர் அக்ஷய் படத்தின் டைட்டில் ரோலில் நடிக்கிறார்.


 


முன்னதாக, ‘இந்திதான் தேசிய மொழி’ என நடிகர் அஜய் தேவ்கன் நடிகர் கிச்சா சுதீப்புக்கு  பாடமெடுத்ததால் டிவிட்டர் ஃபாலோயர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய நடிகர் கிச்சா சுதீப், ‘இந்தி இனி ஒருபோதும் தேசிய மொழியாக முடியாது’ எனப் பேசியிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த அஜய் தேவ்கன், ‘எனது சகோதரா, இந்திதான் எப்போதும் நம் தேசிய மொழி அதனை மாற்ற முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. ட்விட்டர் கணக்காளர்கள், “நமக்கு தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது”, “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன், எங்களுக்கு இந்தி தேசிய மொழி கிடையாது”,”நான் வங்காள மகாராஷ்டிரியர்கள் பிரிவைச் சேர்ந்தவள் அஜய் தேவ்கன் சார். எனக்கு இந்தி தேசிய மொழி இல்லை, கிச்சா சுதீப் சொல்வது சரி” எனப் பல்வேறு கருத்துகள் குவிந்து வருகின்றன.’இந்தி தேசிய மொழி’ என்னும் சர்ச்சைக் கருத்து பல வருடங்களாக பல முக்கிய நபர்களால் நிராகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ச்சியாக தமிழ் மொழியை முன்னிலைப்படுத்திப் பேசி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழணங்கு எனப் பகிர்ந்திருந்தார், அண்மையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ‘டார்க் திராவிடன், ப்ரவுட் தமிழன்’ எனப் பதிவிட்டிருந்தார்.