நாட்டில் முக்கியமான மாநிலங்களான உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேச சட்டசபைத்தேர்தல் முடிவுகளுக்காக நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில், அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்கு கடுமையான நெருக்கடி அளிக்கும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மைன்புரியில் உள்ள கார்ஹல் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார்.




இதுதொடர்பாக, சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில்,  "தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். நமது சமாஜ்வாதியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் மைன்புரியில் உள்ள கார்ஹல் தொகுதியில் போட்டியிட உள்ளார். அந்த தொகுதியில் அவர் மாபெரும் வெற்றியை பெறுவார்" என்று கூறினார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பே சமாஜ்வாதியில் தேசிய செய்தித்தொடர்பாளர் அசுதோஷ் வர்மா, அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார் என்றும், அவர் கார்ஹல் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கார்ஹல் தொகுதியானது சமாஜ்வாதியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 1993ம் ஆண்டு முதல் சமாஜ்வாதி இந்த தொகுதியில் வெற்றியை நிலைநாட்டி வருகிறது. 2002ம் ஆண்டு மட்டும் பா.ஜ.க. வேட்பாளர் சோபரன்சிங் யாதவ் வெற்றி பெற்றிருந்தார். அவரும் அடுத்த தேர்தலில் சமாஜ்வாதியில் இணைந்துவிட்டார். தற்போது அவர்தான் அந்த தொகுதியில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.  




உத்தரபிரதேசத்தின் முதல்வராக 2012-2017ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்த அகிலேஷ் யாதவ், அப்போது எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரானார். பின்னர், கடந்த 2019ம் ஆண்டு எம்.பி.யாக தேர்வானார். இந்த நிலையில், முதன்முறையாக அவர் உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதால் சமாஜ்வாதி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


ராம்கோபால் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சமாஜ்வாதியில் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றையும் அறிவித்தார். இதன்படி, சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் 22 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை தகவல் தொழில்நுட்பத்தில் உருவாக்குவோம்  என்றும் கூறினார்.


சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இருந்து பலரும் சமாஜ்வாதியில் இணைந்து வரும் நேரத்தில், முன்னாள் எம்.பி. பிரவீன்சிங் ஆரோன் மற்றும் முன்னாள் மேயர் சுப்ரியா ஆரோன் ரீடாசிங் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண