ஓவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் விதமாக, நார்த் பிளாக்கில் அல்வா நிகழ்ச்சி நடைபெறும். மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 


பட்ஜெட் என்றால் என்ன?  


ஒவ்வொரு நிதியாண்டும், இந்திய அரசாங்கத்தின் வரவு- செலவீனங்கள் மதிப்பீட்டு அறிக்கையை குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்குமாறு செய்தல் வேண்டும். இந்த மதிப்பீட்டு விவர அறிக்கையே பட்ஜெட் எனப்படுகிறது. 


ஜனவரி 31ம் தேதி , 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையையும், பிப்ரவரி மாதம் முதல் தேதி 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். 




 


பட்ஜெட் தயாரிப்பு: ஓவ்வொரு நிதியான்டிற்கும் பட்ஜெட் அறிக்கையை உருவாக்க பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நிதியமைச்சர் நடத்துவார். முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோரிடம் இருந்த பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை என்பது மரபுவழியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   


அல்வா விழா: நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி நிதிஅமைச்சகம் அமைந்துள்ள  நார்த் பிளாக்கில் நடைபெறும். இந்த விழாவில், நிதியமைச்சர் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தன் கையால் அல்வா பகிர்ந்தளிப்பார். பட்ஜெட் தயாரிப்புக்கு இரவு பகலாக உழைத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.  




 


பூட்டிய அறைக்குள் செல்லும் அதிகாரிகள்: 


நிதிநிலை அறிக்கை என்பது அரசின் மிக முக்கியமான ஆவணமாகும். மக்களவையில் தாக்கல் செய்யபடுவதற்கு முன்புவரை  அது,  ரகசியமாக வைக்கப்படும்.  எனவே, அல்வா விழா முடிந்தவுடன், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை பூட்டிய அறைக்குள் வைக்கப்படுவார்கள். நார்த் பிளாக் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் பட்ஜெட் அச்சகத்தில் அனைத்து அலுவலர்களும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை இருப்பார்கள்.  மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகுதான், இந்த அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களின் உறவினர்களை சந்திக்க முடியும். எனவே, அல்வா விழா என்பது பட்ஜெட் அச்சிடும் பணிகளை தொடக்கத்தை குறிப்பதாக அமைகிறது. 


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரின் முதற்கட்ட அமர்வு இம்மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்ட அமர்வு மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல்  ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  


Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..