'ஆகாசா ஏர்' விமான நிறுவனம், சென்னை, பெங்களூருவுக்கு இடையே இன்று சேவையை தொடங்கியுள்ளது. இந்த விமான நிறுவனம், சேவையை தொடங்கியுள்ள ஐந்தாவது மாநில தலைநகர் சென்னையாகும்.






சென்னை - பெங்களூரு வழிபாதையில் தினசரி இரண்டு விமானங்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது. செப்டம்பர் 26 முதல் சென்னை - கொச்சிக்கு இடையே சேவைகளைத் தொடங்கவும் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் இருந்து அதன் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மும்பை-சென்னை வழித்தடத்தில் செப்டம்பர் 15 முதல் ஒரு கூடுதல் தினசரி விமானத்தை விமான நிறுவனம் தொடங்க உள்ளது. மேலும், செப்டம்பர் 26 முதல் பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் கூடுதல் தினசரி விமான சேவை தொடங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


"எங்கள் நெட்வொர்க்கின் ஐந்தாவது நகரமான சென்னையில் இருந்து வணிக விமானங்கள் தொடங்கப்பட்டதன் மூலம் இன்று மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம். இன்று முதல், இந்த புதிய வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் இருமுறை தினசரி விமான சேவையை வழங்குவோம்" என நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரவீன் ஐயர் கூறியுள்ளார்.


இந்தியா முழுவதும் நெட்வொர்க் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், செப்டம்பர் 26 முதல் சென்னை மற்றும் கொச்சி இடையே புதிய விமான சேவை தொடங்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


மறைந்த இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் , தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 'ஆகாசா ஏர்' நிறுவனத்தை தொடங்கினார். "இந்தியாவின் வாரன் பஃபட்" என்று அழைக்கப்பட்ட இவர் தொட்டதெல்லாம் தங்கம் ஆக மாறும் என்று விளையாட்டாகக் கூறுவதையே உண்மையாக்கி காட்டியவர்.


வணிகர் மற்றும் பட்டயக் கணக்காளர் (CA), மற்றும் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆகாசா ஏர் தொடக்க விழாவில் கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின்படி இவரின் சொத்து மதிப்பு $5.8 பில்லியன் ஆகும். முதலீடுகளை தனது முதன்மையான வருமான ஆதாரமாக கொண்டு சுயமாக உருவாக்கியவர். 


ஜுன்ஜுன்வாலா ஹங்காமா மீடியா மற்றும் ஆப்டெக் ஆகிய நிறுவனங்களின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா மற்றும் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றின் இயக்குநராகவும் இருந்தார்.