நீதிமன்றங்களில் சில வழக்குகளில் நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்பு பெருமளவில் வரவேற்பை பெறும். அந்தவகையில் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் பாலியல் குற்றம் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
மும்பை பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிஷ் சகோர். இவருக்கு 2019ஆம் ஆண்டு முதல் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இவர்கள் இருவரும் தனியாக சந்திக்கும் போது அப்பெண்ணுடன் ஆஷிஷ் உடலுறவு வைத்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முதலில் அப்பெண் மறுத்ததாககவும் பின்னர் அவர் திருமணம் செய்வதாக கூறியதால் ஒப்புதல் அளித்ததாக கருதப்படுகிறது. எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அப்பெண் தன்னை திருமணம் செய்யுமாறு கேட்ட போது ஆஷிஷ் மறுத்துள்ளார். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண் மீது காதல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அப்பெண் ஆஷிஷ் மீது பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆஷிஷ் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
ஆஷிஷ் ஜாமீன் மனு கடந்த 24ஆம் தேதி நீதிபதி பாரதி டாங்கரே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதி, “ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டால் அதை வைத்து ஆண் பாலியல் ரீதியாக உறவிற்கு வறுபுறுத்த கூடாது. பெண்கள் எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் குறைந்தபட்சமாக மரியாதை எதிர்பார்ப்பார்கள். இந்த வழக்கில் மனுதாரர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணிற்கு இவர் திருமணம் செய்து கொள்வதாக கூறிய வார்த்தை தான் உடலுறவு வைத்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
ஆகவே இந்த வழக்கை மேலும் நன்றாக விசாரிக்க வேண்டும். ஆகவே மனுதாரரின் மனு ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார். அத்துடன் ஆஷிஷ் ஜாமீன் மனுவை நீதிபதி பாரதி தள்ளுப்படி செய்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்