மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக, எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


பிளவுப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி:


தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவார், கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சரத் பவாரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் அளவுக்கு பிரச்னை வெடித்தது.


வயதை கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும் என அஜித் பவார் சாடினார். வயது குறித்த அஜித் பவாரின் விமர்சினம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியது.


முடிவுக்கு வருகிறதா மோதல்?


இந்த சூழுலில்தான், சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார், நேற்று தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


இப்படிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிரதீபா பவாரை சந்திக்க அஜித் பவார், சரத் பவாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சில்வர் ஓக்கிற்குச் சென்றுள்ளார்.


மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி:


சரத் பவாருக்கு எதிராக போர்கொடி தூக்கிய அஜித் பவார், கட்சியை உடைத்து, ஜூலை 2ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்த பிறகு, சில்வர் ஓக்கிற்கு அஜித் பவார் செல்வது இதுவே முதல்முறை. பிரதீபாவுக்கு நெருக்கமானவராக கருதப்படுபவர் அஜித் பவார்.  2019ஆம் ஆண்டு, கட்சி பிளவு பட்டதை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அவரை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார்.


கடந்த தேர்தலில், சிவசேனா - பாஜக கூட்டணியாக தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றிருந்தாலும், முதலமைச்சர் பதவி தொடர்பாக இரு கட்சிக்கும் இடையே பிரச்னை வெடித்து, கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. தற்போது நடைபெற்றது போல், அஜித் பவார், பாஜக அரங்காத்தில் இணைந்து துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.


ஆனால், பின்னர், உத்தவ் தாக்கரேவிடம் பேசி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனாவை கொண்டு வந்து ஆட்சி அமைக்க முக்கிய பங்காற்றினார் சரத் பவார். இதை தொடர்ந்துதான், சிவசேனா உடைத்து, ஏக்நாத் ஷிண்டே உதவியுடன் பாஜக ஆட்சி அமைத்தது.