உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற கர்னலுமான அஜய் கொத்தியால், டேராடூனில் அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சியில் இருந்து கோதியால் கடந்த வாரம் ராஜினாமா செய்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். முன்னாள் ராணுவ அதிகாரி கோதியால் கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துவிட்டு, பின்னர் அதே மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் தனது ராஜினாமா கடிதத்தையும் வெளியிட்டார்.






"நான் ஏப்ரல் 19, 2021 முதல் மே 18, 2022 வரை சுமார் ஒருவருட காலம் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்தேன். முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் துணை ராணுவ வீரர்கள், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் உணர்வுகளை மதித்து, நான் தற்போது இந்த ராஜினாமா கடிதத்தை அனுப்புகிறேன். மே 18 அன்று முதல் நான் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று கோதியால் கெஜ்ரிவாலுக்கு அதில் எழுதியுள்ளார்.






இந்த ஆண்டு மார்ச் மாதம், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) உத்தரகாண்டில் 70 இடங்கள் கொண்ட சட்டசபையில் தேவையான பெரும்பான்மையை விட 11 இடங்கள் கூடுதலாகப் பெற்று 47 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆம் ஆத்மி கட்சி பல வெற்றிகளை பெற்றாலும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இருந்த காங்கிரஸ் 19 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.