Airlines : விமானத்தில் மதுபோதையில் பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலமாக, விமானத்தில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணியாளரிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. 


பயணி மீது சிறுநீர் கழிப்பு


அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து 292A என்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அமெரிக்காவில் இருந்து கிளம்பிய விமானம் டெல்லியில் நேற்றிரவு 9 மணியளவில் தரையிறங்கியது.


அப்போது அந்த விமானத்தில் மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் சக பயணியிடம் வாக்குவாதம் செய்ததுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். விமான பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால்  விமான பணியாளர்களின் பேச்சை கேட்காமல் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து, போதை தலைக்கேறிய நிலையில், அவர் அந்த சக பயணி மீது சிறுநீர் கழித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து, டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு விமான ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.  உடனே அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட அமெரிக்க பயணி அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


ஆனால் இந்த சம்பவம் பற்றி அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தெரிகிறது. விமானத்தில் அமெரிக்க பயணி மீது இந்திய பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


மற்றொரு சம்பவம்


இதுபோன்று நடப்பது இதுமுறையல்ல. முன்னதாக, கடந்த நவம்பர் மாதத்தில், மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தது. மேலும், விமானத்தின் பைலட் - இன் கமாண்டின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை