இந்தியாவில் முதல் தண்ணீரில் செல்லும் மெட்ரோ (Water Metro) நாளை (ஏப்ரல் 25) முதல் இயங்க உள்ளது. கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் இந்த முதல் வாட்டர் மெட்ரோவை கொடியசைத்து தொடங்கி வைக்க நாளை கேரள மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.


முதல்வர் பினராயி மகிழ்ச்சி


கொச்சி வாட்டர் மெட்ரோ ரயில் அம்மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மகிழ்ச்சி தெரிவித்தார்.



நிதியுதவி மற்றும் தயாரிப்பு


இந்த வாட்டர் மெட்ரோக்கள் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், மொத்தம் எட்டு மின்சார ஹைபிரிட் படகுகள் முதற்கட்டமாக இயக்கப்படுகின்றன. இந்த கனவு திட்டத்திற்கு கேரள அரசு மற்றும் ஜெர்மன் நிறுவனமான KfW நிதியுதவி அளித்துள்ளது. இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ மொத்தம் 10 தீவுகளை இணைக்கிறது. இந்த 10 தீவுகளும் துறைமுக நகரமான கொச்சியை சுற்றி இருப்பவைதான். 


தொடர்புடைய செய்திகள்: KKR vs CSK, IPL 2023 Highlights: சரணடைந்த கொல்கத்தா.. 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி .. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!


இரண்டு வழித்தடங்கள்


ஒட்டுமொத்த KWM (கொச்சி வாட்டர் மெட்ரோ) திட்டத்தில் 78 மின்சார படகுகள் மற்றும் 38 முனையங்கள் உள்ளன. முதல் கட்டத்தில், KWM சேவையானது உயர் நீதிமன்றம் முதல் வைபின் முனையங்கள் மற்றும் வைட்டிலா முதல் காக்கநாடு முனையங்களில் இருந்து தொடங்கும். கேரள முதல்வரின் கூற்றுப்படி, உயர் நீதிமன்ற முனையத்திலிருந்து வைபின் டெர்மினலை பயணிகள் ட்ராஃபிக்கில் சிக்காமல் 20 நிமிடங்களுக்குள் அடைய முடியும். வைட்டிலாவிலிருந்து வாட்டர் மெட்ரோ வழியாக 25 நிமிடங்களில் காக்கநாடு அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



டிக்கெட் விவரங்கள்


இந்த பயணத்திற்கான குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 20 ரூபாய். வழக்கமான பயணிகளுக்கு வாராந்திர மற்றும் மாதாந்திர பாஸ்கள் உள்ளன. கொச்சி ஒன் கார்டைப் பயன்படுத்தி கொச்சி மெட்ரோ ரயில் மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ இரண்டிலும் பயணிக்கலாம். கொச்சி 'ஒன்' ஆப் மூலம் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம். கொச்சி நீர் மெட்ரோ லித்தியம் டைட்டானைட் ஸ்பைனல் பேட்டரிகளில் இயங்கும். வாட்டர் மெட்ரோ சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மின்சாரத்தில் இயக்கக்கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பானதாகவும் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் குளிரூட்டப்பட்ட படகுகள் பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும். அதன் மூலம் அழகான கொச்சி நகரையும், அங்குள்ள உப்பளங்களில் காட்சியையும் பார்த்து ரசிக்கலாம். கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு ₹1,137 கோடி என்று கூறப்பட்டுள்ளது.