முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரைப் பறித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த, முப்படை சார்பாக நடைபெறும் விசாரணைக்கு ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மன்வேந்தர் சிங் இந்திய விமானப் படை பயிற்சிப் பிரிவில் கமாண்டர். அத்துடன் அவரே ஒரு ஹெலிகாப்டர் பைலட் ஆவார்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர்.
விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி மதுலுகா உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 1958 மார்ச் 16 ம் தேதி உத்தர்காண்ட் மாநிலத்தில் ராணுவ அதிகாரியான எஸ்.எஸ்.,ராவத்திற்கு மகனாக பிறந்த பிபின் ராவத், சிறந்த ராணுவ அதிகாரியாக பணியாற்றி, இந்தியாவின் முதல் முப்படைகளின் தளபதியாக உயர் பொறுப்பை வகித்தவர். கேப்டன் வருண் சிங் 80 தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தர்காண்ட் அரசு அறிவித்துள்ளது. மேலும், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பதிவிட்டுள்ள ட்வீட்டில், "என் தந்தையைப் போன்ற வழிகாட்டியை இன்று இழந்துவிட்டேன். ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு உத்தரகாண்ட் மற்றும் இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மறைந்த ஸ்ரீமதி மதுலிகா ராவத் ஜியிடம் நாங்கள் எப்போதும் அன்பைப் பெற்றுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில், விபத்தில் உயிரிழந்த 13 பேரின் பெயர்கள் தனித்தனியாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கு இரு அவைகளில் எம்.பி,க்களின் முன்னிலையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விபத்தில் இறந்தவர்களின் விவரம்:
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.
அவரது மனைவி மதுலிகா ராவத்.
பிபின் ராவத்தின் ஆலோசகர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர்.
லெஃப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுஹான்
ஸ்குவாட்ரன் லீடர் குல்தீப் சிங்
ஜூனியர் வாரன்ட் ஆஃபீஸர் ரானா பிரதாப் தாஸ்
ஜூனியர் வாரன்ட் ஆஃபீஸர் அரக்கல் பிரதீப்
ஹலிதார் சத்பால் ராய்
நாயக் குருசேவக் சிங்
நாயக் ஜிதேந்திர குமார்
லேன்ஸ் நாயக் விவேக் குமார்
லேன்ஸ் நாயக் சாய் தேஜா
அனைவரின் உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்ட அங்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது.