நாட்டில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து பயணிப்பதற்கு விமான பயணம் முதன்மையாக இருந்து வருகிறது. இந்தியாவில் விமான போக்குவரத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா உள்ளது. பொதுவாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கம். இந்த சூழலில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் ப்ளேடு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவில் ப்ளேடு:
மாதுரஸ் பால் என்ற பயணி இதுதொடர்பாக அவரது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் அத்திப்பழ சாட்டை சாப்பிட்ட சில நொடிகளில் ஒரு வித உணர்வு ஏற்பட்டது. அப்போது, அதன் உள்ளே பிளேடு போன்ற உலோகத்துண்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏர் இந்தியா உணவு சேவையில் கண்டிப்பாக குறை உள்ளது.
ஒரு வேளை, ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவில் இது இருந்தால் என்ன செய்வது? முதல் படத்தில் நான் துப்பிய உலோகத் துண்டை காட்டுகிறது. இரண்டாவத படம் எனக்கு உணவு வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஏர் இந்தியா சொல்வது என்ன?
ஏர் இந்தியா பயணியின் குற்றச்சாட்டிற்கு ஏர் இந்தியா தலைமை வாடிக்கையாளர் அதிகாரி ராஜேஷ் டோக்ரா அளித்துள்ள விளக்கத்தில், எங்கள் விமானம் ஒன்றில் விருந்தினரின் உணவில் வெளிநாட்டு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. விசாரணைக்கு பிறகு இது எங்கள் கேட்டரிங் பார்ட்னரின் வசதிகளில் பயன்படுத்தப்படும் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்தில் இருந்து வந்தது என அடையாளம் காணப்பட்டது. எங்களுடைய கேட்டரிங் பார்ட்னருடன் சேர்ந்து, மீண்டும் இதுபோன்று வராமல் தடுப்பதற்கு நடவடிக்கைகளை நாங்கள் வலுப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்தாண்டு டாடா நிறுவனம் வாங்கியது. ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு சென்ற பயணி ஒருவர் விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும், இருக்கைகளும் சுத்தமாக இல்லாமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.