சமீப காலமாக, விமானத்தில் தொடர் சர்ச்சை அரங்கேறி வரும் நிலையில், விமானப் பணிப் பெண்ணிடம் வெளிநாட்டு பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஜனவரி 5ஆம் தேதி, டெல்லியில் இருந்து கோவாவுக்கு சென்ற கோ பர்ஸ்ட் விமானத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை தனக்கு அருகே உட்காரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.


அதுமட்டுமின்றி, மற்றொரு விமானப் பணிப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கோவா மோபாவில் திறக்கப்பட்ட புதிய விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகு, அந்த நபர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மோபாவில் புதிய விமானம் திறக்கப்பட்ட அதே நாளில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.


ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சத பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கோ பர்ஸ்ட் விமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், விமானத்தை இயக்கிய விமானி, விமான குழுவினர் நான்கு பேருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டும், விளக்கம் கேட்டும் விமான குழுவினர் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான காம்ப்பெல் வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், மிஸ்ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது. 


இதற்கிடையே, இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "நடந்து வரும் விசாரணை முடிவடைந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும்" என்றார்.



டாடா குழுமத்தின் தலைவருக்கு பாதிக்கப்பட்ட வயதான பெண் எழுதிய கடிதத்தில், "சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையில் உட்கார விரும்பவில்லை என கூறினேன். எனவே, எனக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.


ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எனது இருக்கைக்குத் திரும்பும்படி விமான பணியாளர்கள் கூறினர். சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து துர்நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்தனர். 


அதே இருக்கையில் அமர்வதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். எனக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது. அன்று முழுவதும் நான் அங்கேயே படுத்து உறங்கினேன். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் எனக்கு அந்த இருக்கை வழங்கப்படவில்லை" என குற்றம் சாட்டி இருந்தார்.