இன்றைய சூழலில், பல்வேறு பிரச்னைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும் முக்கிய பிரச்னையாக கருதப்படுவது ஊழல்.


இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தொடர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரயில்வே மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.


பணி செய்யாதவர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 16 மாதங்களாக மூன்று நாள்களுக்கு ஒரு முறை ஒரு ஊழல் அதிகாரி நீக்கப்பட்டதாக உயர்மட்ட அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


அதேபோல, 139 அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டு விருப்பு ஓய்வை எடுக்க வைத்துள்ளனர். 38 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இரண்டு மூத்த அதிகாரிகள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் ஹைதராபாத்தில் 5 லட்சம் ரூபாய் லஞ்சத்துடன் சிபிஐ பிடித்துள்ளது. மற்றொருவர் ராஞ்சியில் 3 லட்சம் ரூபாயுடன் சிக்கியுள்ளார்.


 






ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை குறித்து விவரித்த அந்த மூத்த அதிகாரி, "சிறப்பாக பணியாற்ற வேண்டும் அல்லது வேலையை விட்டு செல்ல வேண்டும் என்பதில் (ரயில்வே) அமைச்சர் (அஸ்வினி வைஷ்ணவ்) மிக தெளிவாக உள்ளார். கடந்த 2021ஆம், ஜூலை மாதம் முதல் மூன்று நாள்களுக்கும் ஒரு முறை ஒரு அதிகாரியை நீக்கி வருகிறோம்" என்றார்.


இந்த விவகாரத்தில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 56(J) விதியை ரயில்வே பயன்படுத்தி உள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாத நோட்டீஸ் பீரியடுக்கு பிறகோ அல்லது மூன்று மாதத்திற்கான ஊதியத்தை அளித்த பிறகோ ஒரு அரசு ஊழியரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைக்கலாம் அல்லது பணி நீக்கம் செய்யலாம்.


பணி செய்யாதவர்களை மத்திய அரசு பணி நீக்கம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வினி வைஷ்ணவ், ஜூலை 2021 இல் ரயில்வே அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, ஒழுங்காக பணியாற்றவில்லை என்றால், "விருப்பு ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டில் உட்காரும்படி" பலமுறை எச்சரித்துள்ளார்.


கட்டாய விருப்பு ஓய்வு அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் மின்சாரம் மற்றும் சிக்னலிங் துறை, மருத்துவம் மற்றும் குடிமை பணி, கடைகள், போக்குவரத்து மற்றும் இயந்திரவியல் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் அடங்குவர்.


விருப்பு ஓய்வு திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ், பணி காலத்தில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு ஊழியருக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு சமமான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இதே போன்ற பலன்கள் கட்டாய ஓய்வூதியத்தில் அளிக்கப்படாது.