அமெரிக்காவில் 5ஜி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், இன்று (ஜன.19) முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்கள் குறைக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
5ஜி தொழில்நுட்பத்துக்கும் விமான சேவைக்கும் என்ன தொடர்பு என்று எல்லோருக்கும் கேள்வி எழலாம்.
அமெரிக்கத் தொலைதொடர்பு நிறுவனங்களான வெரிசான் மற்றும் ஏடி&டி ஆகிய 2 நிறுவனங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தைக் கைப்பற்றின. இதன் மதிப்பு பல நூறு கோடிக்கணக்கான டாலர்களைத் தாண்டும். ஏலத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரு நிறுவனங்களும் 3.7- 3.98 GHz என்ற அலைவரிசையில், தங்களின் 5ஜி சி - அலைக்கற்றை சேவையை டிசம்பர் 5 முதல் நாடு (அமெரிக்கா) முழுவதும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
5ஜி சேவை அமலாக்கம்
இதற்கு விமான சேவை நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான, மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் (Federal Aviation Administration - FAA) இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்னதாகக் கடிதமும் எழுதியிருந்தது. 5ஜி தொழில்நுட்பத்தால், விமான சேவைக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேள்வி எழக்கூடும்.
ஆல்டிமீட்டர் சேவை பாதிப்பு
5ஜி தொழில்நுட்பம், விமான உபகரணங்களின் சேவையை பாதிக்கும். குறிப்பாக, விமானங்கள் தரையில் இருந்து பறக்கும் உயரத்தைக் கணக்கிடும் ரேடியோ ஆல்டிமீட்டர் சேவை பாதிக்கப்படலாம். ஏனெனில், ஆல்டிமீட்டர்கள் 4.2- 4.4 GHz அலைவரிசையில் இயங்குபவை. அவை 5ஜி தொழில்நுட்பத்தின் அலைக்கற்றைக்கு வெகு அருகில் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேபோல ஆல்டிமீட்டர்கள் தானியங்கி முறையில் தரையிறங்கவும் உதவுகின்றன. 5ஜி அலைக்கற்றை குறுக்கீட்டால், ஆல்டிமீட்டர்கள் சேவை பாதிக்கப்பட்டு, விமானங்கள் தானியங்கி முறையில் தரையிறங்கும் முறை பாதிக்கப்படும். இதனால், ஓடுதளத்தில் விமானங்கள் நிற்காமல் செல்லவும் வாய்ப்புண்டு என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவிலேயே பல்வேறு விமான நிறுவனங்கள் தங்களின் சேவையைத் தற்காலிகமாகக் குறைத்து / நிறுத்தி வைத்துள்ளன.
இந்திய விமான சேவை ரத்து
அமெரிக்காவில் 5ஜி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், இன்று (ஜன.19) முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்கள் குறைக்கப்படுகின்றன என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக டெல்லி -நியூயார்க்- டெல்லி, டெல்லி- சான் ஃபிரான்சிஸ்கோ- டெல்லி, டெல்லி- சிகாகோ- டெல்லி மற்றும் மும்பை- நேவார்க் (நியூஜெர்ஸி)- மும்பை ஆகிய இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா தவிர, எமிரேட்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் சான் ஃபிரான்சிஸ்கோ, சியாட்டில், மியாமி, நேவார்க், டலாஸ்/ ஃபோர்ட் வொர்த், ஆர்லண்டோ, ஹூஸ்டன், சிகாகோ மற்றும் பாஸ்டன் ஆகிய அமெரிக்க விமான நிலையங்களுக்குத் தங்களின் விமான சேவையை ரத்து செய்துள்ளன.
விமான சேவைகளில் குழப்பம்
அதேபோல அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஃபெட் எக்ஸ் எக்ஸ்பிரஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர், யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் புளூ ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக விமான சேவைகளில் குழப்பம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளன.
இந்தியாவில் இதுகுறித்து 6 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இந்திய விமானிகள் கூட்டமைப்பு, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், டிஜிசிஏ எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் ட்ராய் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் 5ஜி மொபைல் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் அமல்படுத்தத் தேவையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 5ஜி சேவை அமலாக்கம் இரண்டு முறை தள்ளிப்போய் ஜனவரி 19-ம் தேதி தொடங்கும் என்று இறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் தங்களின் 5ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்றும் இது பல்வேறு பிற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் வெரிசான் மற்றும் ஏடி&டி தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தேவைப்பட்டால், குறிப்பிட்ட விமான நிலையங்களில் தங்களின் சேவையை வரைமுறைப்படுத்திக் கொள்வதாகவும் அறிவித்துள்ளன.
தீர்வு என்ன?
குறுகிய கால அடிப்படையில், வெரிசான் மற்றும் ஏடி&டி ஆகிய அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள், முக்கியமான விமான நிலையங்களுக்கு அருகே கம்பியில்லாத டவர்களை நிறுவுவதைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதன்மூலம் அமெரிக்கா வரும் விமானங்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க முடியும்.
நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் 5ஜி சி அலைக்கற்றை அமல்படுத்தப்பட்ட விமான நிலையங்களில், அமெரிக்க வணிக விமானங்கள் பிரச்சினையின்றித் தரையிறங்க அனுமதிக்க வேண்டும். அதாவது 5ஜி விமான நிலையங்களுக்கு அருகே ஆல்டிமீட்டர்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.