அகமதாபாத் விமான விபத்துக்கு பிந்தைய 6 நாள்களில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் காரணமாக ஏர் இந்தியா விமான முன்பதிவு 30 முதல் 35 சதவிகிதம் குறைந்துள்ளதாக ப்ளூ ஸ்டார் ஏர் டிராவல் சர்வீசஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் மாதவ் ஓசா தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு விபத்து.. பயந்து நடுங்கும் பயணிகள்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்து உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கடந்த 12ஆம் தேதி, அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மற்ற பயணிகள் அனைவரும் தீக்கிரையாகினர்.
எதிர்காலத்தில் இம்மாதிரியான விமான விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் விரிவான நெறிமுறைகளை தயார் செய்ய உள்துறை செயலாளர் தலைமையில் மத்திய அரசு உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், விமான விபத்து மக்கள் மத்தியில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான முன்பதிவு பயங்கர சரிவு:
இதன் காரணமாக, விபத்துக்கு பிந்தைய 6 நாள்களில் ஏர் இந்தியா விமான முன்பதிவு 30 முதல் 35 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ப்ளூ ஸ்டார் ஏர் டிராவல் சர்வீசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மாதவ் ஓசா கூறுகையில், "புதிய முன்பதிவுகளைப் பொறுத்தவரை, 30-35% குறைந்துள்ளது. இதில் விமான விபத்து தவிர இஸ்ரேல்-ஈரான் மோதலின் தாக்கமும் அடங்கும்" என்றார்.
விமானத்தை ரத்து செய்த பலர் தங்கள் அச்சத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜூன் 19 ஆம் தேதி, ராஞ்சியிலிருந்து ஹைதராபாத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்லவிருந்த சுப்ராஜ் பிரசாத் சிங், தனது விமான டிக்கெட்டை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், "விபத்துக்குப் பிறகு எனது விமானத்தை ரத்து செய்தேன். ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து பல செய்திகளை பார்த்தேன். இதனால், முன்பதிவைத் தொடர தயங்கினேன். விமான நிறுவனம் பணத்தைத் திரும்ப தரவோ அல்லது எந்த உதவியும் வழங்கவோ மறுத்துவிட்டது" என பதிவிட்டுள்ளார்.
இதேபோன்ற அனுபவத்தை நடிகையும் மாடலுமான மீரா சோப்ராவும் தெரிவித்திருந்தார். அவரும் அவரது கணவரும் துபாய்க்கு பயணிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், விபத்துக்குப் பிறகு உடனடியாக தங்கள் திட்டங்களை கைவிட்டனர்.