நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் பரபரப்பு:


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு நேற்று விஸ்தாரா விமானம் சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட உடனேயே, அதில் பெற்றோருடன் பயணித்த இரண்டு வயது குழந்தையின் மூச்சு நின்று போயுள்ளது. இதனால், குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதை தொடர்ந்து, குழந்தை தொடர்பாக விமானத்தில் அவசர அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், அதே விமானத்தில் பயணித்த அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) 5 மருத்துவர்கள், குழந்தையின் மூச்சுத் திணறலை நிறுத்தி, குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.


உயிருக்கு போராடிய இரண்டு வயது குழந்தை:


அவசர அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனடியாக குழந்தையை பரிசோதித்து, குழுவினர் அவசர  சிகிச்சையைத் தொடங்கினர். இதனை தொடர்ந்து, குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குழந்தையின் புகைப்படங்களும் மருத்துவர்களின் புகைப்படங்களும் டெல்லி எய்ம்ஸ் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் வெளியிட்ட பதிவில், "பெங்களூருவில் இருந்து விஸ்தாரா ஏர்லைன் விமானம் UK-814 திரும்பும் போது, ​​ஒரு அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டது. சயனோடிக் (ரத்தத்தின் ஆக்ஸிஜனேற்றம் குறைபாடு) இதய நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தைக்கு ஏற்கனவே இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பயணிகளை வியக்க வைத்த எய்ம்ஸ் மருத்தவர்கள்:


உடனடியாக குழந்தை பரிசோதிக்கப்பட்டபோது, அதற்கு நாடித்துடிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. அதேபோல, உடல் குளிர்ச்சியாக இருந்தன. சயனோஸ் செய்யப்பட்ட குழந்தையின் உதடுகள் மற்றும் விரல்களில் நீள நிறம் பூர்த்திருந்தது. நடுவானிலேயே குழந்தைக்கு குறைந்த கருவிகளை கொண்டு, CPR (உயிர்காக்கும்) அவசர சிகிச்சை தொடங்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளது.


 






இதையடுத்து விமானம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டு அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.