சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்படும் ஆதித்யா - எல்1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது.


உலக நாடுகளை மிரளவைக்கும் இந்தியா:


நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இந்த மாதம் 23ஆம் தேதி மாலை நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.  இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது இஸ்ரோ. அதன்படி, நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய விண்கலம் அனுப்பப்படும் என இஸ்ரோ அறிவித்தது.


சூரியனை ஆராய தேதி குறித்த இஸ்ரோ:


இந்த நிலையில், அந்த விண்கலம் எப்போது ஏவப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, சூரியனில் ஒளிந்திருக்கும் மர்மங்களை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா - எல்1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.


நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலத்தை விட 4 மடங்கு அதிக தூரத்தை கடந்து ஆதித்யா - எல்1 விண்கலம் பயணிக்க உள்ளது. அதாவது, பூமியில் இருந்து 1.5 மில்லியின் கிமீ தூரத்திற்கு ஆதித்யா - எல்1 பயணிக்க உள்ளது. 150 மில்லியன் கிமீ தூரத்தில் இருந்து இந்த விண்கலம் ஆராயுமே தவிர, சூரியனுக்கு அருகில் கூட இந்த விண்கலம் செல்லாது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி எக்ஸ் எல் ராக்கெட் மூலம்  ஆதித்யா - எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. முதற்கட்டமாக, இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அதைத் தொடர்ந்து, சுற்றுப்பாதை மேலும் நீள்வட்டமாக மாற்றப்பட்டு, பின்னர் உள் உந்துவிசையைப் பயன்படுத்தி விண்கலம் லாக்ரேஞ்ச் (சூரியன் மற்றும் பூமியின்) ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கக்கூடிய விண்வெளி பகுதி) புள்ளியை (L1) நோக்கி செலுத்தப்படும்.


விண்கலம் L1 நோக்கி பயணிக்கும்போது, ​​அது பூமியின் ஈர்ப்பு கோளத்திலிருந்து (SOI) வெளியேறும். SOI இலிருந்து வெளியேறிய பிறகு, விண்கலம் L1 பெரிய ஒளிவட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இந்த L1 புள்ளியில் இருந்துதான், ஆதித்யா - எல்1 விண்கலம் சூரியனை ஆராய உள்ளது. ஏவப்பட்டதிலிருந்து எல்1 வரையிலான மொத்த பயண நேரம் ஆதித்யா-எல்1 விண்கலத்திற்கு நான்கு மாதங்கள் ஆகும்.