அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளாகி, அதில் பயணித்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம்
அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, மேகானி நகரில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்பு கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இதனால் பல நூறு அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும், அதாவது 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல், பிஜே மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பலரும் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம்
அகமதாபாத்தில் விபத்திற்குள்ளானது போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம். இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் என்பது, விமான நிறுவனங்களால் கண்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் நீண்ட தூர விமானமாகும். இதன் முதல் பயணம் அக்டோபர் 26, 2011 அன்று டோக்கியோவின் நரிட்டாவிலிருந்து ஹாங்காங்கிற்கு ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் மூலம் நடைபெற்றது. அதன்பிறகு, 14 ஆண்டுகளுக்குள் 1 பில்லியனுக்கும் அதிகமான பயணிகள் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் பயணித்துள்ளனர்.
2011-ம் ஆண்டு சேவையில் நுழைந்ததிலிருந்து, ட்ரீம்லைனர் விமானம் எந்த உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கான விபத்துகளையும் எதிர்கொண்டதில்லை என்ற பெருமை பெற்றிருந்தது. ஆனால், அகமதாபாத் விபத்து மூலம் அது முடிவுக்கு வந்துள்ளது. போயிங் 787 சீரிஸில் தற்போது 3 மாடல்கள் உள்ளன. அதில், போயிங் 787-8 தான் மிகச் சிறியது மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாடல் ஆகும். இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து போயிங் 2,500-க்கும் மேற்பட்ட 787 ரக விமானங்களை விற்றுள்ளது. அதில், 47 விமானங்களை ஏர் இந்தியா வாங்கியுள்ளது.
விபத்திற்கான காரணமாக நிபுணர்கள் கூறுவது என்ன.?
இப்படிப்பட்ட சூழலில், இதுவரை கிடைத்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு இன்ஜின்களிலும் உந்துவிசை இல்லாதது மற்றும் பறவை மோதியது ஆகியவை விபத்திற்கான சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், இவை எல்லாம், அவர்களின் அனுபவங்கள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் கூறப்படுவது தான். இந்த விபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால், அதிலிருந்து பல தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டது.
மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி
இந்த நிலையில், விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது. விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த மருத்துவக் கல்லூரி விடுதியின் மேற்கூரையிலிருந்து இந்த கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விரைவில் விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.