இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நாளை சவுதாம்டன் நகரில் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகள் வீரர்கள் கடைசி கட்ட பயிற்சில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் நாளை நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடர்பாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக வீடியோ மற்றும் பதிவுகளை இட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை அவருடைய மனைவியும் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் நேர்காணல் எடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் பும்ராவின் பழைய இன்ஸ்டாகிராம் பதிவுகளிலிருந்து படங்களை எடுத்து அவரிடம் அது குறித்து கேட்கப்படுகிறது. இதற்கு அவரும் ஜாலியாக பதிலளிக்கிறார்.
அந்த வீடியோவில், "முதலில் நேர்காணலுக்கு வந்து அமரும் பும்ரா கேமராவைப் பார்க்கணுமா, இல்லை உன்னை பார்க்கணுமா என்று கேட்க அதற்கு மனைவி சஞ்சனா அது உங்கள் இஷ்டம் என்று பதில் அளிக்கிறார். பின்பு முதலில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற படம் குறித்து அவரிடம் கேட்கப்படுகிறது. இது மிகவும் மறக்க முடியாத வெற்றி. நான் அந்தப் போட்டியில் விளையாடவில்லை எனினும் என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத நாள் எனக் கூறினார்.
அதன்பின்னர் பும்ரா கித்தார் வாசிக்கும் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு கித்தார் வாசிக்கத் தெரியாது. இது என்னுடைய அக்காவின் கித்தார். நான் அதை வைத்து போட்டோவிற்காக வாசிக்கும் வகையில் அமர்ந்திருந்தேன் என்று கூறினார். அடுத்து அவர் தன்னுடைய அக்காவுடம் இருக்கும் சிறு வயது படம் குறித்து கேட்கப்படுகிறது. அதற்கு இது நான் மிகவும் சிறுவனாக இருக்கும் போது எடுக்கப்பட்டது. இதுகுறித்து என்னைவிட என்னுடைய அக்காவிற்கு தான் அதிகம் தெரியும் என்று பதில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பும்ராவின் முதல் கிளப் கிரிக்கெட் போட்டி தொடர்பான போட்டோ குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இதுதான் நான் சிறப்பாக விளையாடிய முதல் போட்டி என்று பதிலளித்தார். அதன்பின்னர் பும்ராவின் திருமண படங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அது என் வாழ்வில் மறக்கமுடியாத பொன்னான நாள் எனக் கூறினார்" என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்ததன.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கும் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண படம் சமூவலைதளத்தில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛கனவில் நினைத்து... உணவில் நனைத்து... எதிர்ப்பை அணைத்து...’ காதலில் வென்ற கங்குலி கதை!